HT Cricket Special: அதிக ரஞ்சி போட்டிகள், ரஞ்சி ரன்கள் எடுத்த வீரர்! இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் ஹீரோ வாசிம் ஜாபர்
Feb 16, 2024, 06:30 AM IST
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் ஹீரோவாக ஜொலித்த வாசிம் ஜாபர், சர்வதேச போட்டிகளிலும் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஓபனிங் டெஸ்ட் பேட்ஸ்மேனாக 2000 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் விளையாடியவர் வாசிம் ஜாபர். செளரவ் கங்குலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அறிமுகமான இவர் கவனிக்கதக்க வகையில் சில முக்கியமான இன்னிங்ஸை உள்ளூர், அந்நிய மண்ணிலும் விளையாடினார்.
குறிப்பாக 2006ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 500 நிமிடம் வரை கிரீஸில் நின்று 212 ரன்கள் அடித்தார். இது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய பேட்ஸ்மேனின் சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது. இதேபோல் 2007இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இரட்டை சதமடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்த 31 போட்டிகளில் 5 சதம் அடித்திருக்கும் ஜாபர், அதில் இரண்டு இரட்டை சதமாக அடித்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் ஹீரோ
முதல் தர கிரிக்கெட்டில் இரண்டாவது போட்டியிலேயே முச்சதம் அடித்தார் ஜாபர். மும்பை அணிக்காக 1996 முதல் 2015 வரை ரஞ்சி போட்டிகளில் விளையாடிய இவர், பின்னர் 2015 முதல் 2020 வரை விதர்பா அணிக்காக விளையாடினார்.
மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், அந்த அணியின் 38,39வது ரஞ்சி கோப்பையை வென்று கொடுத்தார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற வாசிம் ஜாபர், 146 போட்டிகளில் பங்கேற்று அதிக ரஞ்சி போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்.
2020இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாபர், வங்கதேச கிரிக்கெட் அணி பேட்டிங் ஆலோசகர், வங்கதேச யு19 அணி பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
அதேபோல் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரகண்ட், ஒடிசா அணிகள் பயிற்சியாளராக செயல்பட்ட ஜாபர், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார்.
260 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜாபர், 19, 410 ரன்கள் அடித்துள்ளார். இதில் 57 சதம், 91 அரைசதங்கள் அடங்கும். இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் மெஷினாகவும், ஹீரோவாக ஜொலித்த ஜாபருக்கு இன்று பிறந்தநாள்
டாபிக்ஸ்