HT Cricket Special: 93 ஆல்அவுட்! உலக சாம்பியன் வெஸ்ட்இண்டீசை தோற்கடித்து அப்செட் செய்த கென்யா
Feb 29, 2024, 07:46 AM IST
கத்துக்குட்டி அணியாக முதல் முறை உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய கென்யா, இரண்டு முறை உலகக் கோப்பை வாங்கிய ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களை இதே நாளில் ஆச்சர்யபார்வை பார்க்க வைத்தது.
உலகக் கோப்பை தொடர்களில் எப்போதும் ஏதாவதொரு சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிகழ்வது இயல்புதான். குறிப்பாக டாப் அணிகளின் வீழ்ச்சி, கத்துக்குட்டி அணிகளின் எழுச்சி, உலகக் கோப்பை போட்டிகளில் புதுமையான சாதனை என்று நடப்பதுண்டு.
அந்த வகையில் கத்துக்குட்டி அணிகளிடம், டாப் அணிகள் உலகக் கோப்பை தொடர்களில் பெறும் தோல்வியை உலகக் கோப்பை அப்செட் என்று அழைப்பதுண்டு. அப்படி முதல் முறையாக 1996 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய கென்யா அணி, இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்று அப்செட் செய்தது.
கென்யாவின் முதல் உலகக் கோப்பை தொடரின் வெற்றியாக அமைந்த இந்த போட்டி லீப் நாளான பிப்ரவரி 29ஆம் தேதி நடந்தது மற்றொரு தனி சிறப்பு. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை, 100 ரன்களை கூட கடக்கவிடாமல் வெறும் 93 ரன்களில் ஆல் அவுட்டாக்கியது மாரிச் ஒடும்பே தலைமையிலான கென்யா படை.
1996 உலகக் கோப்பை தொடரின் 20வது போட்டியாகவும், கென்யா அணி விளையாடிய நான்காவது போட்டியாகவும் இது அமைந்தது. இதற்கு முன் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக விளையாடிய கென்யா தோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து முதல் வெற்றிக்கான தேடுதல் வேட்டையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை புனேவில் எதிர்கொண்டது. ஆம்ரோஸ், வால்ஷ் போன்ற டாப் கிளாஸ் பவுலர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் முதலில் பேட் செய்த கென்யா 166 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இதைத்தொடர்ந்து இந்த எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது வெஸ்ட் கென்யா பவுலிங் படை. மித வேக பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் நிறைந்த கென்யாவின் துல்லிய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக பெவிலியன் திரும்பினார்கள்.
35.2 ஓவர்கள் எதிர்கொண்ட போதிலும் 93 ரன்கள் மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்அவுட்டாகி, 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக் கோப்பை தொடரில் பெற்ற முதல் வெற்றியையே வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றினார்கள் கென்யா அணியினர்.
அதிலும் லீப் நாளில் அவர்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவம் பெற்றதாக அமைந்தது.
உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பெற்ற மோசமான தோல்வியாக இது அமைந்ததது, உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான அப்செட்களில் இடம்பிடித்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்