HT Cricket Special: இந்தியா - நியூசிலாந்து போட்டியில் நடந்த கொடூரம்! கிரிக்கெட்டில் நிகழ்ந்த மோசமான பேரழிவு தெரியுமா?
Nov 26, 2023, 06:50 AM IST
இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்ததை பற்றி வீரர்களிடம் மூச்சு கூட காட்டாமல் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள் ஆட்டத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர வைத்தனர். கிரிக்கெட் விளையாட்டில் மோசமான பேரழிவாக அமைந்த இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.
கடந்த 1995 நவம்பர் 26ஆம் தேதி இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத மிகவும் மோசமான சம்பவம் நடந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டியில் விளையாடியது. ஐந்து ஆண்டு இடைவெளி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதிய 5வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்திருந்தது.
இன்று போல் இந்த போட்டி நடைபெற்ற அன்றும் ஞாயிற்றுகிழமையாக இருந்தது. விடுமுறை நாள் என்பதால் போட்டியை காண மைதானத்தில் கூட்டம் அலைமோதியது. பகல் நேர ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து நாதன் ஆஸ்லே அதிரடி சதத்தால் 348 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தனது இன்னிங்ஸை முடித்த பின்பு பிரேக்கில் நிகழ்ந்த சம்பவம், கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாக அமைந்தது.
கிழக்கு பெவிலியனின் மூன்றாம் அடுக்கில் இருந்த பார்வையாளர்கள் கீழே இறங்க முயன்றபோது, 2வது அடுக்கில் இருந்தவர்கள் மேலே நகர்ந்தபோது, அழுத்தத்தின் காரணமாக படிக்கட்டுகளின் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகள் தாழ்வான ஸ்டாண்டில் இருந்தவர்கள் மீதும் விழுந்ததில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 70க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். ஆனால் இப்படியொரு சம்பவம் பற்றிய தகவலை வீரர்களிடம் தெரிவிக்காமல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தனர். விபத்துக்குள்ளான சுவர் பகுதி 1996ஆம் ஆண்டில் நடைபெற இருந்த உலகக் கோப்பை போட்டிக்காக வைத்து கட்டப்பட்டது.
நியூசிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போட்டிக்கு பின்னர் விபத்து குறித்து நடைபெற்ற விசாரணைியில் உரிய வலுவூட்டல் இல்லாமல் மைதானம் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கு காரணமாக இருந்த கட்டிட கலைஞர், ஒப்பந்ததாரர் என நான்கு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதன்பின்னர் திட்டமிட்டபடி 1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய உலகக் கோப்பை போட்டி இங்கு நடைபெற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்