IPL Throwback: இதிலும் கில்லியாக இருக்கும் சிஎஸ்கே! ஐபிஎல் தொடரில் அதிக முறை பர்பிள் தொப்பி வென்றவர் யார்?
Mar 13, 2024, 06:13 PM IST
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் பவுலர்களுக்கு தரப்படும் பர்பிள் தொப்பியை அதிக முறை வென்றவரும், வென்ற அணியும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டி20 கிரிக்கெட் விளையாட்டு பவுலர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. வெறும் 20 ஓவர் மட்டுமே நடக்கும் இந்த போட்டியில் , 50 ஓவர்கள் விளையாடக்கூடிய ஒரு நாள் போட்டியில் சராசரியாக அடிக்கப்படும் ரன்களுக்கு இணையாகவே பேட்ஸ்மேன் தங்களது அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் செய்வதென்பது இயல்பான விஷயமாகவே இருந்து வருகிறது.
20 ஓவர்களில் வீசப்படும் 120 பந்துகளில் 150 ரன்களுக்கு மேல் சர்வசாதாரணமாக பேட்டிங் அணிகள் அடித்து ரன்குவிப்பில் ஈடுபடுகின்றன. இதை வைத்து பார்க்கையில் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்களே மிகவும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கர்களால் பார்க்கப்படும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்களை பின்னுக்கு தள்ளி பவுலர்கள் சாதிப்பதென்பது சிறப்பு வாய்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்களுக்கு பர்பிள் தொப்பி வழங்கப்பட்டு, அந்த பவுலர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் பேட்ஸ்மேன்களின் களமாக இருக்கும் டி20 கிரிக்கெட்டில், ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்ற வீரர்கள் யாரெல்லம் என்பதை பார்க்கலாம்
ஐபிஎல் சீசன்கள்
2008 முதல் ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் 2023 வரை என 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஒவ்வொரு சீசன்களிலும் வெவ்வேறு பவுலர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றுள்ளனர்.
கடந்த சீசனில் பர்பிள் தொப்பி வெற்றியாளராக குஜராத் டைட்டன்ஸ் வீரர் முகமது ஷமி உள்ளர். இவர் 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2008 முதல் 2023 வரை பர்பிள் தொப்பி வெற்றியாளர்கள்
- ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான சோஹைல் தன்வீர், 2008 சீசனில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக பர்பிள் தொப்பியை வென்றார்.
- 2009 சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பரிக்காவில் நடந்த இந்த சீசனில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 2010 சீசனில் முதல் முறையாக ஸ்பின் பவுலர் பிரக்யன் ஓஜா பர்பிள் தொப்பியை வென்றார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய அவர் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்தார்
- 2011 சீசனில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடின. இந்த சீசனில் 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பர்பிள் தொப்பியை வென்றார்
- 2012 சீசனில் டெல்லி அணியில் இடம்பிடித்த மோர்னே மார்கல் 16 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக திகழ்ந்தார்.
- 2013 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் டாப் அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய டுவெய்ன் பிராவோ 32 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 2014 சீசனில் மீண்டும் சிஎஸ்கே வீரரான மோகித் ஷர்மா பர்பிள் தொப்பியை வென்றார். அவர் 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை எடுத்தார்
- 2015 சீசனில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பர்பிள் தொப்பியை தன் வசமாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த முறை டுவெய்ன் பிராவோ 26 விக்கெட்டுகளை எடுத்தார். அத்துடன் இரண்டாவது முறையாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்
- 2016 சீசனில் 17 போட்டிகளில் 23 விக்கெட்டுகள், 2017 சீசனில் 26 விக்கெட்டுகள் என தொடர்ந்து இரண்டு முறை பர்பிள் தொப்பியை தன்வசம் ஆக்கிக்கொண்டார் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடிய புவனேஷ்வர் குமார்
- 2018 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரு டை 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
- 2019 சீசனில் சிஎஸ்கே அணிக்கு நான்காவது முறையாக இந்த பட்டம் கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்தவர் தென்ஆப்பரிக்காவை சேர்ந்த முன்னாள் ஸ்பின் பவுலரான இம்ரான் தாஹிர். அவர் 26 விக்கெட்டுகள் இந்த சீசனில் கைப்பற்றினார்
- 2020 சீசனில் டெல்லியை சேர்ந்த ககிசோ ரபாடா 17 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
- 2021 சீசனில் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்சிபி பவுலர் ஹர்சல் பட்டேல், ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் பிராவோவின் சாதனையை சமன் செய்தார்
- 2022 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய யஸ்வேந்திரா சஹால் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் பவுலராக ஜொலித்தார்
- 2023 சீசனில் 28 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி இந்த பட்டத்தை வென்றார்.
- ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களுக்கு வழங்கப்படும் பர்பிள் தொப்பை பட்டத்தையும் 4 முறை வென்று அதிக முறை வென்ற அணியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9