HBD Krishnamachari Srikkanth: 83 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் டாப் ஸ்கோரர் ஸ்ரீகாந்த் பிறந்த நாள் இன்று
Dec 21, 2023, 04:45 AM IST
‘ஹே மச்சான் எப்டி இருக்க’ என அவர் ஜாலியாக வர்ணனையில் கேட்பது ரசிக்கும் வகையில் இருக்கும்.
83 இல் உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் பிறந்த நாள் இன்று. சீக்கா என்றும் அழைக்கப்படுபவர். அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்த அவர், எப்போதாவது பந்துவீசவும் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் பின்னர் ஆடவர் தேர்வுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 38 ரன்கள் எடுத்தார். ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைலுக்கு பெயர் பெற்ற அவர், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் தமிழ்நாடு மற்றும் தென் மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றுகிறார். 2019 ஆம் ஆண்டில், அவருக்கு பிசிசிஐ மூலம் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை, மயிலாப்பூரில் சி.ஆர்.கிருஷ்ணமாச்சாரி மற்றும் இந்திரா கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
அவருக்கு இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர், சகோதரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீநாத் மற்றும் சகோதரி ஸ்ரீகலா பரத். அவர் வித்யா மந்திரில் பள்ளிப்படிப்பை முடித்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியாளராகப் பட்டம் பெற்றார். ஸ்ரீகாந்த் 30 மார்ச் 1983 அன்று வித்யா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆதித்யா மற்றும் அனிருதா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் கிரிக்கெட் வீரர்கள்.
25 நவம்பர் 1981 அன்று அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தனது 21வது வயதில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 83 உலகக் கோப்பையில் டாப் ஸ்கோரர் இவரே. அவரது ஸ்கோர் என்ன தெரியுமா? 38.
1 சிக்ஸர், 7 ஃபோர்ஸ் விளாசினார் ஸ்ரீகாந்த். 57 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவர் எல்பிடபிள்யூ ஆனார். தற்போது பெரும்பாலான கிரிக்கெட் ஆட்டங்களில் வர்ணனையாளராக ஜாலியான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
‘ஹே மச்சான் எப்படி இருக்க’ என அவர் ஜாலியாக வர்ணனையில் கேட்பது ரசிக்கும் வகையில் இருக்கும். பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துகள்!
டாபிக்ஸ்