CSK Vs LSG: கேப்டனாக மாபெரும் சாதனை படைத்த ருதுராஜ்..மாஸ் காட்டிய துபே..லக்னோ வெற்றிக்கு 211 ரன்கள் தேவை!
Apr 23, 2024, 09:34 PM IST
CSK Vs LSG: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தியுள்ளார். நடப்பு சீசனில் இது அவரது முதல் சதமாகும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கி உள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ரகானே மற்றும் கேப்டன் ருதுராஜ் துவக்கம் தந்தனர்.
மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரிலே கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் அஜிங்கியா ரகானே. இதனைத் தொடர்ந்து வந்த மிட்செல், ருதுராஜூடன் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் ருதுராஜ் அதிரடியாக ஆட, மறுபுறம் மிட்செல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. இருப்பினும் 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிட்செல் அவுட்டானார். அதன்பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா ஜோபிக்கவில்லை. 19 பந்துகளை சந்தித்த ஜடேஜா 16 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிபம் துபே, கெய்க்வாட்டுக்கு பக்கபலமாக செயல்பட்டார். துபே மற்றும் ருதுராஜ் இணைந்து 48 பந்துகளில் 108 ரன்கள் விளாசினர். இறுதிவரை அதிரடி காட்டிய துபே 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த தோனி பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். நடப்பு சீசனில் இது அவரது முதல் சதமாகும். தோனி 4 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது. லக்னோ அணியின் மேட் ஹென்றி, யாஷ் தாக்கூர், மோக்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கி உள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் 4 வெற்றியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 போட்டிகளில் 4 வெற்றியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையே லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியது. எனவே இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்