HT Cricket Special: மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைக்கு இன்று பிறந்தநாள்
Nov 25, 2023, 06:40 AM IST
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் விளையாடிய வீராங்கனை என்ற பெருமக்குரியவராக மட்டுமில்லாமல், இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கும் மகளிர் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ளார் ஜூலன் கோஸ்வாமி.
இந்திய மகளிரி கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட் என மூன்று வகை போட்டிகளிலும் சிறந்த பவுலராக முத்திரை பதித்தவர் ஜூலன் கோஸ்வாமி. மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த இவர் 5 அடி 11 அங்குலம் உயரத்துடன் இந்தியாவின் உயரமான வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். இந்த நூற்றாண்டில் இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக இருந்துள்ளார் கோஸ்வாமி.
15 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வரும் கோஸ்வாமிக்கு இந்த விளையாட்டை விளையாடுவதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனையான பெலிண்டா கிளார்க். வங்காளம் மகளிர் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
மார்ச் 2002இல், தனது 19வது வயதின்போது முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் களமிறங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதலில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர், பின்னர் அதே தொடரில் டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். 2008 முதல் 2011 வரை இந்திய மகளிர் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பெற்ற முதல் வெற்றியை பதிவு செய்த அணியில் இடம்பிடித்திருந்தார். பவுலரான இவர் அந்த போட்டியில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி அரைசதம் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை தந்தார். இதே தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட்டுகள் என 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். இதை செய்தபோது கோஸ்வாமிக்கு 23 வயது தான். இதன் மூலம் இளம் வயதில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகவும் மாறினார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை தன் வசம் வைத்திருக்கும் கோஸ்வாமி, பின்னர் 250 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் பவுலராகவும் மாறினார். 2007ஆம் ஆண்டில் ஐசிசி சிறந்த மகளிர் கிரிக்கெட்டர், அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது வென்றிருக்கும் கோஸ்வாமிக்கு புகழ் சேர்க்கும் விதமாக இந்தியா தபால் துறை அவரது உருவத்தில் ஸ்டாம்பும் வெளியிட்டுள்ளது.
39 வயதான கோஸ்வாமி தனது கடைசி சர்வதேச போட்டியை கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடினார். இந்த போட்டியில் இந்திய வெற்றி பெற்ற நிலையில், வெற்றியுடன் பிரியாவிடையும் பெற்றார்.
வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது 20 ஆண்டு கால கிரிக்கெட் கேரியரில், டெஸ்ட், ஒரு நாள், டி20 என சேர்த்து 281 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 352 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கிலும் 1924 ரன்கள் குவித்துள்ளார்.
மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு. இவரது சிறந்த பெளலிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5/25, ஒரு நாள் கிரிக்கெட்டில் 6/31, டி20 கிரிக்கெட்டில் 5/11 என உள்ளது.
ஜூலன் கோஸ்வாமி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நெட்பிளிக்ஸில் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கோஸ்வாமி கதாபாத்திரத்தில், விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா நடித்து வருகிறார்.
தனது கேரியரில் அதிக பந்துகளை பவுலிங் செய்தவர், அதிக விக்கெட்டுகளை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தியவர், 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என பல்வேறு சாதனைகளை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்தியுள்ளார். இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக அனில் கும்ப்ளே இருப்பது போல், மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஜூலன் கோஸ்வாமியின் பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்