India vs South Africa 2nd Test: 642 பந்துகள், 5 செஷன்கள்! குறுகிய டெஸ்ட் போட்டி - 90 ஆண்டுக்கு பின் சாதனை
Jan 05, 2024, 09:15 AM IST
India vs South Africa, 2nd Test: வெறும் ஐந்து செஷன்கள் மட்டுமே இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையிலான கேப்டவுன் டெஸ்ட் போட்டி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய போட்டியாக அமைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி டி20, ஒரு நாள் தொடரை தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒரு இன்னிங்ஸ், 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடைபெறாத நிகழ்வாக இந்த போட்டியானது முழுமையாக இரண்டு நாள்கள் கூட நடைபெறாத நிலையில், 5 செஷனில் முடிவுக்கு வந்தது.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய நேரத்தில் முடிந்த போட்டி என்ற சாதனையாக இந்தியா - தென் ஆப்பரிக்கா கேப்டவுனில் விளையாடிய போட்டி அமைந்துள்ளது. வெறும் 642 பந்துகள் மட்டும் இந்த ஆட்டத்தில் வீசப்பட்டுள்ளன.
இதற்கு முன் 1932இல் ஆஸ்திரேலியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி 656 பந்துகளில் முடிந்தது. இதுவே மிகவும் குறுகிய காலத்தில் முடிந்த டெஸ்ட் போட்டியாக இருந்த நிலையில் தற்போது 90 ஆண்டுகளுக்கு பிறகு அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா முதல் நாளில் முதல் செஷன் முடிவதற்குள் 55 ரன்களில் ஆல்அவுட்டானது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது செஷனில் களமிறங்கிய இந்தியா 98 ரன்கள் முன்னிலை பெற்று, 153 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. முதல் இரண்டு செஷனில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தன.
இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவை விட 36 ரன்கள் குறைவாக இருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பரிக்கா, அந்த நாளின் முதல் செஷன் வரை பேட்டிங் செய்த நிலையில் கூடுதலாக 114 ரன்கள் எடுத்து 176 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போட்டியின் 5வது செஷனும், இரண்டாவது நாளில் இரண்டாவது செஷனிலும் இந்தியா பேட் செய்தது. 12 ஓவரில் இலக்கை சேஸ் செய்து இந்தியா வெற்றி பெற்றதுடன் தொடரை சமன் செய்தது.
இந்த போட்டி முழுவதும் பவுலர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நன்கு எடுபட, அதை சரியாக பயன்படுத்திய இரு அணி பவுலர்களும் பேட்ஸ்மேன்களை நிலைத்து நிற்க விடாமல் திணறடித்து, விக்கெட்டுகளையும் அள்ளினர்.
முதல் நாளில் மட்டும் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதற்கு முன்னர் 1902ஆம் ஆண்டில் மெர்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் ஒரே நாளில் 25 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டன. இதுவே இன்று வரையில் ஒரே நாளில் அதிக விக்கெட்டுகள் எடுக்கப்பட்ட சாதனையாக உள்ளது.
அதேபோல் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 11 பந்தில் 6 விக்கெட்டுகளை இழந்ததுடன், ரன் எதுவும் எடுக்கவில்லை. இப்படியொரு மோசமான சாதனையையும் இந்திய படைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9