India vs South Africa 2nd T20I: ரிங்குவின் வேர்வையெல்லாம் வேஸ்ட்;தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா! - யார் மீது தவறு?
Dec 13, 2023, 07:17 AM IST
அங்கு மழை பெய்த காரணத்தினால் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2 வது டி 20 போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழி நடத்தினார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற 2 வது டி 20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரை 4 -1 என்ற கணக்கில் கைபற்றியது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி 20 போட்டி டர்பனில் கடந்த 10ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், அங்கு மழை பெய்த காரணத்தினால், அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2 வது டி 20 போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழி நடத்தினார்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் இருந்து, முதலாவதாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 3 வது பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
2 வதாக களமிறங்கிய சுப்மன் கில் 2 வது ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆனார். இதனால், 2 வது ஓவர் முடிவில் இந்திய அணி வெறும் 6 ரன்களுக்கு 2 பெரும் விக்கெட்டுகளை காவு கொடுத்து விட்டது.
இதனை தொடர்ந்து 3 வது விக்கெட்டிற்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் எடுத்த நிலையில், திலக் வர்மா 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக ஆடினார்.
இந்த ஜோடி, அணியை ஏறு வரிசை பாதைக்கு அழைத்து சென்றது. இதனிடையே அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்த வந்த ஜிதேஷ் 1 ரன்னில் அவுட்டாக, ஜடேஜா 19 ரன்னில் அவுட் ஆனார். ரிங்கு சிங் மட்டும் பொறுப்பாகி ஆடி 39 பந்துகளில், 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில், இந்திய அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்திருந்தது.
ஆனால், இடையே மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து டிஎல்எஸ் முறையில் போட்டியை அணுகிய நிர்வாகம், தென் ஆப்பிரிக்கா அணி தன்னுடைய வெற்றிக்கு 15 ஓவர்களில் 152 ரன்களை எடுக்க வேண்டும் என்று கூறி இலக்கு நிர்ணயித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே நன்றாக ஆடியது. இதனால் 13.5 ஓவர்கள் முடிவிலேயே 5 விக்கெட்டுகளை இழப்பு 154 ரன்களை குவித்து போட்டியை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்று இருக்கிறது.
டாபிக்ஸ்