IND vs SA 1st Test Preview: ‘காயத்துக்கு மருந்தாகுமா?’-ரோகித் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி!
Dec 26, 2023, 07:10 AM IST
டி20 தொடர் சமன் ஆன நிலையில், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், 2 டெஸ்ட் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி செவ்வாய்கிழமை செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பை இறுதி தோல்விக்குப் பிறகு ரோஹித் ஷர்மா மீண்டும் டீம் இந்தியாவை வழிநடத்துகிறார், மேலும் தென் ஆப்பிரிக்க தேசத்தில் 31 ஆண்டுகளாக ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இதை ரோகித் முடிவுக்குக் கொண்டுவருவார் என்று இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களும் ரசிகைகளும் நம்புகிறார்கள். இருப்பினும், செஞ்சூரியனில் உள்ள ஆடுகளத்தில் இந்தியாவின் பேட்டிங் வரிசையை தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சோதிக்கும் என்பதால் இது சாதாரணமாக நிகழ்ந்துவிடப் போவது கிடையாது.
இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை கையில் எடுப்பார் என தெரிகிறது. அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் அனுபவம் அதிகம் இருக்கிறதே தவிர, டெஸ்டில் அந்த அளவுக்கு அனுபவம் கிடையாது. இருப்பினும், அவர் அதற்கு தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, "கேஎல் ராகுல் முதல் டெஸ்டில் விளையாடுவார். கே.எல். ராகுல் கடந்த ஆறு மாதங்களாக நன்றாக கீப்பிங் செய்து வருகிறார், அவர் சிறப்பாக செயல்படுகிறார். பிளேயிங் லெவனில் கீப்பராக வலுவான பேட்ஸ்மேன் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்" என்றார்.
போட்டிக்கு முன்னதாக செஞ்சூரியனில் இந்தியா பயிற்சி செய்ய திட்டமிடப்பட்டது, ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர்களின் திட்டங்கள் கைவிடப்பட்டன.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில், இந்தியா ஷர்துல் தாக்கூர் உள்பட மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று நம்பலாம். அப்படியானால், நாளைய இந்திய ப்ளேயிங் லெவனில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஷ்வின் இடம் பிடிக்க முடியாது.
இந்தியா பிளேயிங் லெவன் உத்தேசப் பட்டியல்:
ரோஹித் சர்மா, சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/முகேஷ் குமார்.
தென்னாப்பிரிக்கா உத்தேச பிளேயிங் லெவன்: டீன் எல்கர், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், டோனி டி ஜோர்ஜி, கைல் வெர்ரேய்ன், கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, நான்ட்ரே பர்கர்.
இதுவரை நேருக்கு நேர்
இதுவரை 32 ஆட்டங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு அணிகளும் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 15 ஆட்டங்களிலும், தென் ஆப்பிரிக்கா 17 ஆட்டங்களிலும் விளையாடியிருக்கிறது. கடைசியாக 2022இல் இரு அணிகளும் டெஸ்டில் விளையாடின.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.