36 வருடத்திற்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து.. வொர்க் அவுட் ஆகாத ரோகித் பிளான்
Oct 20, 2024, 12:25 PM IST
பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிராக 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2வது இன்னிங்ஸில் விளையாடியது. தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் இருந்தாலும் அதன் பிறகு நிலையாக நின்று விளையாடி இலக்கை எட்டியது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து ஜெயித்தது.36 வருடத்திற்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து. அந்த அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெங்களூரில் தொடங்கியது. முதல் நாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இரண்டாவது நாளில் டாஸ் போடப்பட்டது. இந்தியா டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, யாருமே எதிர்பாராத வகையில் 46 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 31.2 ஓவர்களில் இந்தியா சரணடைந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 462 ரன்களை குவித்தது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 4 வது நாளான நேற்று தொடங்கியது. இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து இலக்கை எட்டி ஜெயித்தது. டாம் லாதம் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். டெவன் கான்வே 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் நிதானமாக விளையாடி இலக்கை எட்ட முயன்றது. 2வது இன்னிங்ஸில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
36 வருடத்திற்கு பிறகு வெற்றி
வொர்க் அவுட் ஆகாத ரோகித்தின் பிளான்
முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டான இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதை கருத்தில் கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் பேட் செய்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த நாளின் கடைசி பந்தில் கோலி 70 ரன்களில் அவுட்டாக, களத்தில் சர்பராஸ் கான் 70 ரன்களுடன் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். நான்காம் நாள் ஆட்டத்தை ரிஷப் பண்ட் உடன் தொடர்ந்த சர்பராஸ் கான், சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். அவர் 110 பந்துகளில் 100 ரன்கள் அடித்து தனது இன்னிங்ஸில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
சர்பராஸ் உடன் பார்டனர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட், பேட்டிங் செய்ய வந்தது முதல் விரைவாக ரன்கள் குவிப்பதில் குறியாக இருந்தார். 55 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த பண்ட் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பின் அணியின் ஸ்கோர் மளமள வென உயர்ந்தது.
71 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் என இருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது சர்பராஸ் 125, பண்ட் 53 ரன்கள் என களத்தில் இருந்தனர். பின்னர் உணவு இடைவேளை நேரத்துக்கு பின்னரும் மழை தொடர்ந்த நிலையில் சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மதியம் 1.50 மணிக்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. சர்ஃபராஸ் 150 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித், கோலி அரை சதம் விளாசி அசத்தினர்.
டாஸ் ஜெயித்த ரோகித், ஜெயித்துவிடலாம் என கணித்தது முதல் டெஸ்டில் தவறாகிப் போனது. நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட், வரும் 24ம் தேதி புனேவில் நடைபெறுகிறது.
டாபிக்ஸ்