India vs England Test series: இளம் ப்ளஸ் அனுபவ வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா! அணி வீரர்கள், முழு அட்டவணை விவரம்
Jan 21, 2024, 04:25 PM IST
இளம் வீரர்கள் ப்ளஸ் அனுபவ வீரர்களின் கலவையாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அமைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 25 தொடங்கி மார்ச் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி பிசிசிஐ அறிவித்துள்ளது. இளம் வீரர்கள், அனுபவ வீரர்களின் கலவையாக இந்த அணி அமைந்துள்ளது. அத்துடன் அனுபவ வீரர்களான சத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே ஆகியோர் இந்த தொடரிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுகிறார். ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டனாக உள்ளார். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சேர்க்கப்படவில்லை. அதேபோல் இஷன் கிஷனும் சேர்க்கப்படவில்லை.
இவர்கள் இருவருக்கும் பதிலாக இளம் வீரர்கள் ஆவேஷ் கான், துருவ் ஜுரல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த உத்தரபிரதேச வீரரான துருவ் ஜூரல், தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவர் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி முழு விவரம்:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஸஷ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார்.
இந்திய மைதானங்கள் ஸ்பின்னுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், மொத்தம் 4 ஸ்பின்னர்கள் இந்திய அணியில் உள்ளார்கள். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களும் நான்கு பேர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் - பிப்ரவரி 2 முதல் 6ஆம் தேதி வரை விசாகபட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகரரெட்டி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் - பிப்ரவரி 15 முதல் 19 வரை ராஜ்கோட்டில் உள்ள செளராஸ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் - பிப்ரவரி 23 முதல் - 27 வரை ராஞ்சியிலுள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் - மார்ச் 7 முதல் 11 வரை தரம்சாலாவில் இருக்கும் ஹிமாச்சல பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடைசியாக இங்கிலாந்து 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. இதன் பின்னர் 2016-17, 2020-21 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தது. இந்த இரண்டு தொடர்களிலும் தோல்வியை தழுவியது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எங்கு பார்க்கலாம்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலில் பார்க்கலாம்.
ஓடிடி லைவ் ஸ்டீரிமிங்காக ஜியோ சினிமா செயலியில் இலவசமாக கண்டுகளிக்கலாம்
அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்