IND vs SA 2nd ODI Result: சதம் விளாசி அசத்திய இளம் வீரர்.. 2வது ஒரு நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி!
Dec 19, 2023, 11:31 PM IST
டோனி டி சோர்சி அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். இது அவரது முதல் சதம் ஆகும்.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
212 என்ற எளிய ரன் சேஸிங்கை எட்டிப் பிடித்தது தென் ஆப்பிரிக்கா. முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்திருந்த நிலையில், 2வது ஒரு நாள் போட்டியில் போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா ஜெயித்துள்ளது.
இதனால், 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் 1-1 என சமன் ஆனது. 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் வரும் வியாழன் 21ம் தேதி Paarl- இல் நடைபெறவுள்ளது.
சேஸிங்கில் அதிரடியாக ஆடியது தென் ஆப்பிரிக்கா. டோனி டி சோர்சி அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். இது அவரது முதல் சதம் ஆகும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் 119 ரன்கள் விளாசினார். ஹென்றிக்ஸ் அரை சதம் விளாசி 52 ரன்களில் ஆட்டமிழந்தார். டசன் 36 ரன்களில் நடையைக் கட்டினார். எய்டன் மார்க்ரம் 2 ரன்கள் எடுத்தார். ரிங்கு, அர்ஷ்தீப் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, 300 பந்துகளில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது.
தென்னாப்பிரிக்காவின் Gqeberha-இல் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவருக்கு சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் தொப்பியை வழங்கினார்.
அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவும் நடையைக் கட்டினார். எனினும், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் நிதானமாக செயல்பட்டு அரை சதம் பதிவு செய்தார்.
பின்னர், அவரது விக்கெட்டை வில்லியம்ஸ் எடுத்தார். பின்னர் கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். எனினும், இந்த ஜோடியை ஹென்றிக்ஸ் பிரித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. கே.எல்.ராகுல் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இவ்வாறாக 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன்களை மட்டுமே இந்தியா எடுக்க முடிந்தது.
பர்கர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றிக்ஸ், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.