IND vs IRE 1st T20: வேகம் குறையாத பும்ரா! அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் திணறல் - இந்தியாவுக்கு சவாலான இலக்கு
Aug 18, 2023, 09:16 PM IST
கம்பேக் போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை தூக்கி அசத்தினார் ஜஸ்ப்ரீத் பும்ரா. அயர்லாந்து டாப் ஆர்டரை பவர்ப்ளே ஓவர்களிலேயே காலி செய்து ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்கள் நெருக்கடி அளித்த போதிலும், கடைசி கட்டத்தில் சிறப்பாக பினிஷ் செய்து இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டப்ளின் நகரிலுள்ள மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கில் ஆரம்பத்தில் திணறியபோதிலும் பின்னர் நிலைத்து நின்று பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டது. இதன் விளைவாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து அணியின் டாப் ஆர்டரை பவர்ப்ளே முடிவதற்குள் காலி செய்தது இந்திய அணியின் வேக கூட்டணி. தனது கம்பேக் போட்டியில் முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் விக்கெட்டு எடுத்தார் பும்ரா. அத்துடன் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை தூக்கினார்.
காயத்தில் இருந்து மீண்டு டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியிருக்கும் பிரசித் கிருஷ்ணாவும் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்தார். பவர்ப்ளே முடிவில் 30 ரன்கள் மட்டும் எடுத்து முதல் 4 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து அணி தடுமாறியது.
இதைத்தொடர்ந்து அணியை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கர்டிஸ் கேம்பர் மீட்டார். அவருடன் இணைந்து மார்க் அடெய்ர் பார்னர்ஷிப் அமைத்தார். சிறப்பாக பேட் செய்து வந்த கேம்பர் 39 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் பாரி மெக்கார்த்தி அதிரடி காட்டி அணிக்கு நல்ல பினிஷிங்கை கொடுத்தார். இவர் 33 பந்தில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய பவுலர்களில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் எடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்