IND vs ENG 5th Test Day 2: இந்தியா சரவெடி ஆட்டம்.. 255 ரன்கள் முன்னிலை!
Mar 08, 2024, 05:51 PM IST
2வது நாள் முடிவில் குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 2வது நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 120 ஓவர்களில் 473 ரன்களை குவித்துள்ளது.
இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்தியா. கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதம் பதிவு செய்தனர்.
தேவ்தத் படிக்கல், சர்ஃபராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதம் விளாசினார். கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜுரெல் 15 ரன்களிலும், ஜடேஜா 15 ரன்களிலும் நடையைக் கட்டினர். அஸ்வின் ரன்னின்றி நடையைக் கட்டினார். குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2வது நாள் ஆட்ட நேர முடிவில் 473 ரன்களை குவித்துள்ளது இந்தியா. நாளை 3வது நாள் ஆட்டம் தொடங்குகிறது. ஷோயப் பஷிர் 4 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
முன்னதாக, இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து நல்ல தொடக்கத்தை தந்தது. முதல் செஷன் முடிவில் உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது செஷன் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. இந்த செஷனில் இந்தியாவின் ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் தேநீர் இடைவேளை வரை 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் மூன்றாவது செஷன் தொடங்கிய அடுத்த 2 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே எஞ்சிய இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில், 57.4 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியது, இங்கிலாந்து.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 30 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இந்தியா, முதல் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்டநேரமுடிவில் 83 ரன்கள் பின் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் - குல்தீப் கலக்கல்:
இந்திய அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியயோர் மிக துல்லியமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தனர். இவர்கள் வீசிய பந்தை அடித்து ஆட முடியாமலும், டிபெண்ட் செய்து சமாளிக்க முடியாமலும் தடுமாறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை எடுத்தார். இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைவான பந்துகளை வீசி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ளார், இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவ்.
டாபிக்ஸ்