HT Cricket Special: உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக ஹாட்ரிக் எடுத்த பவுலர்! ஒரு நாள் போட்டியில் சதமடித்த டெயிலண்டர்
Jan 03, 2024, 06:00 AM IST
வேகப்பந்து வீச்சாளர்களுக்கான முக்கிய தகுதியாக இருக்கும் உயரம் குறைவாக இருந்தாலும் அசாத்திய பந்து வீச்சால் கவனம் பெற்ற பவுலராக இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடி தந்தவர் சேட்டன் ஷர்மா.
இந்தியாவுக்காக 1983 முதல் 1994 வரை டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வீரர் சேட்டன் ஷர்மா. அடிப்படையில் வேகப்பந்து வீச்சாளரான இவர், சிறந்த டெயிலண்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.
பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த சேட்டன் ஷர்மா 18 வயதில், இளம் வேகப்பந்து வீச்சாளராக முதன் முதலில் ஒரு நாள் போட்டியில் 1983இல் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 1984இல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டார்.
ஒரு நாள் போட்டி போன்றே டெஸ்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார். கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் இவர் உயரம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தனர். ஆனால் தனது சிறந்த பந்து வீச்சின் மூலம் அவர்களின் வாயடைத்தார்.
முதல் டெஸ்ட் தொடரிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சேட்டன் ஷர்மா, அடுத்த தொடரில் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்த சாதனை புரிந்தார். இருப்பினும் சேட்டன் ஷர்மா நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் நீடிக்கவில்லை.
தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் முக்கிய பவுலராக ஜொலித்து வந்த இவர், 1987 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
ஒரு நாள் போட்டியில் சதமடித்த டெயில் பேட்ஸ்மேன் என்ற பெருமை சேட்டன் ஷர்மாவுக்கு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 1989இல் நடைபெற்ற நேரு கோப்பை தொடரில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக புரொமோட் செய்து களமிறக்கப்பட்டபோது இதை செய்தார். இதே தொடரில் அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மனோஜ் பிரபாகருடன் இணைந்து 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இவர், சிக்ஸருடன் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார்.
இவரது பேட்டிங் திறமைக்கு மற்றொரு சான்றாக 1985இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நைட் வாட்ச்மேனாக களமிறங்கி பலம் வாய்ந்த பவுலிங்கை எதிர்கொண்டு அரைசதமடித்தார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக இருந்து வந்த இவர், 2020இல் இந்திய அணி தேர்வு குழு தலைவராக செயல்பட்டார். இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வரும் சேட்டன் ஷர்மாவுக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்