Cricket World Cup SPL: 79 உலகக் கோப்பையில் எதிரணியை பேட்டிங்கால் திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்
Sep 29, 2023, 05:05 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 65 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிரான 2வது அரையிறுதியில் 73 ரன்களும் விளாசி அசத்தினார் கோர்டன்.
2023-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. ஆசிய கோப்பை, இந்தியா-ஆஸ்திரேலியா ODI தொடர் என அடுத்தடுத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருத்து படைக்கப்பட்டுவிட்டது. தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது.
உலகக் கோப்பை வரை அதுதொடர்பாக ஸ்பெஷல் கட்டுரைகளை உங்களுக்காக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வழங்குகிறது.
இந்தச் செய்தித்தொகுப்பில் இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்கோர் பதிவு செய்த வீரர் குறித்து தெரிந்து கொள்வோம்.
1975இல் தான் ஆடவர் கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. புரொடன்ஷியல் அசூரன்ஸ் கம்பெனி இந்தத் தொடருக்கு ஸ்பான்சர் செய்தது. அதனால் இந்தத் தொடரை புரொடன்ஷியல் உலகக் கோப்பை என அழைக்கப்பட்டது. அந்த தொடர் 60 ஓவர்கள் கொண்ட தொடராக இருந்தது.
இந்தத் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டு அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தத் தொடரும் அதே நாட்டில் தான் நடத்தப்பட்டது.
இதுவும் புரொடன்ஷியல் உலகக் கோப்பை என்று தான் அழைக்கப்பட்டது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. 15 போட்டிகள் நடத்தப்பட்டன. மீண்டும் சாம்பியனாக பட்டம் சூடியது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி. இந்த முறை ரன்னர் அப் ஆனது இங்கிலாந்து அணி.
இந்த கிரிக்கெட் தொடரில் அதிக ஸ்கோர் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோர்டன் கிரீனிட்ஜ். இவர் மொத்தம் 253 ரன்களை குவித்தார். இவரது ஆவரேஜ் 84.33.
1979-ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இலங்கை மற்றும் கனடா அணிகள் தகுதி பெற்றன.
இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கையும், கனடாவும் கோதாவில் குதித்தது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனான சர் கோர்டன் கிரீனிட்ஜ் சதம் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார். ஆமாங்க, அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் தான் ஜெயிச்சுது. இப்படி தொடக்கத்திலேயே அதிரடி வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸுக்கு உதவியர்தான் இந்த சர் கோர்டன் கிரீனிட்ஜ்.
பின்னர், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 65 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிரான 2வது அரையிறுதியில் 73 ரன்களும் விளாசி அசத்தினார் கோர்டன்.
ஆனால், இப்படி பைனல் வரை முன்னேற முக்கியப் பங்காற்றிய கோர்டன், இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் வெறும் 9 ரன்களே எடுத்தார். ஆனால், அன்றைய தினம் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் லெஜண்ட் சர் விவ் ரிச்சர்ட்ஸ் நாளாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் 138 ரன்களை விவ் ரிச்சர்ட்ஸ் பதிவு செய்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோர்டன் கருதப்படுகிறார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 128 ஆட்டங்களில் விளையாடிய அவர், 5,134 ரன்களை குவித்தார். மொத்தம் 11 சதங்களையும், 31 அரை சதங்களையும் ODI இல் பதிவு செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 108 மேட்ச்களில் விளையாடியுள்ள கோர்டன், 7558 ரன்களை குவித்தார். டெஸ்டில் 19 சதங்களையும், 34 அரை சதங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
டாபிக்ஸ்