Cricket Player Dead: களத்தில் சுருண்டு விழுந்த கர்நாடக கிரிக்கெட் வீரர் மரணம்
Feb 24, 2024, 01:54 PM IST
கர்நாடகா அணியின் முன்னாள் ஜுனியர் கிரிக்கெட் வீரரான ஹொய்சலா, தமிழ்நாடு அணிக்கு எதிரான தென் மண்டல போட்டியில் விளையாடியபோது களத்திலேயே வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஹொய்சலா (34), ஏஜிஸ் தென் மண்டல போட்டிகளில் விளையாடி வந்தார். இதையடுத்து இவர் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 20ஆம் தேதி நடந்துள்ளது.
தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் வீரர்களுக்கு விருது அளிக்கும் நிகழ்வின்போது ஹொய்சலா திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் எடுத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் ஹொய்சலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தனியார் மருத்துவமனையின் டீன் மனோஜ் குமார் கூறியதாவது: " ஹொய்சலா மாரடைப்பு காரணமாக இறந்திருக்ககூடும். பிரேத பரிசோதனையை முடிந்துள்ள நிலையில், அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
கிரிக்கெட் வீர்ர இறப்பு குறித்து தகவல் அறிந்த, கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தனது எக்ஸ் பக்கத்தில், " ஏஜிஸ் தென் மண்டல போட்டியின் போது, கர்நாடகாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான கே. ஹொய்சாலாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன்.
இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
இளைஞர்கள் மாரடைப்புக்கு ஆளாகும் சமீபத்திய சம்பவங்கள், சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும், இதய ஆரோக்கியம் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் ஹொய்சாலா, கர்நாடக ப்ரீமியர் லீக் தொடரில் பெல்லாரி டஸ்கர்ஸ், ஷிவமோக்கா லயன்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார். பின்னர் கேஎஸ்சிஏ மகாராஜா டி20 கோப்பையில் இரண்டு சீசன்களில் விளையாடினார். தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக வெற்றி பெற்ற போட்டியில் ஹொய்சாலா முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்