Eng vs Ind Test Day 3: ‘எப்படி போட்டாலும் அடிக்கரான் பா’-நங்கூரமாய் விளையாடும் இங்கி., வீரர்
Jan 27, 2024, 06:26 PM IST
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர் ஒல்லி போப் 148 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார்.
ஜாக் க்ராவ்லி 31 ரன்களிலும், பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஒல்லி போப் 148 ரன்கள் அடித்து கள்ததில் உள்ளார். அவருக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் எப்படி எப்படியோ பந்துவீசி பார்த்து விட்டனர். ஆனால், மனுஷன் நின்று விளையாடுகிறார். இன்றைய நாளில் மட்டும் அவர் 17 ஃபோர்ஸை விரட்டியிருக்கிறார்.
மறுபக்கம் ஜோ ரூட் 2 ரன்களில் நடையைக் கட்ட, ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக் 6 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
பென் ஃபோக்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ரெஹான் அகமது, போப் ஆகியோர் களத்தில் உள்ளனர். பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்னதாக, ரவீந்திர ஜடேஜா சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் 180 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 44 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த சிராஜ், பும்ராவும் டக் அவுட்டாகினர். இதையடுத்து, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 121 ஓவர்களில் 436 ரன்களை குவித்தது. இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. முன்னதாக, இங்கிலாந்து தரப்பில் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை அள்ளினார். டாம் ஹார்ட்லி, ரெஹன் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஜாக் லீச் 1 விக்கெட்டை எடுத்தார்.
இங்கிலாந்து-இந்தியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்தியா 175 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டாபிக்ஸ்