IPL Throwback: ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர்களில் தனித்துவ சாதனை படைத்த டேவிட் வார்னர், விராட் கோலி
Mar 14, 2024, 06:15 AM IST
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் சரி சமமாக வென்றுள்ளனர். இதில் இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் அதிகபட்சமாக 3 முறை வென்றிருக்கிறார்.
சிக்ஸர். பவுண்டரி என பேட்ஸ்மேன்கள் வானவேடிக்கை காட்டும் களமாகவே டி20 கிரிக்கெட் இருந்து வருகின்றன. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் ஒரு வீரருக்கு ஸ்டார் அந்தஸ்தை பெற்று தரும் விருதாக ஆரஞ்சு தொப்பி இருந்து வருகிறது. அதிக ரன்களை அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கிய 2008 முதல் கடைசி சீசனான 2023 வரையில் மொத்தமுள்ள 16 சீசன்களில் யாரெல்லாம் ஆரஞ்சு தொப்பி வென்றுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்
ஐபிஎல் தொடர் ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர்கள் லிஸ்ட்
ஷான் மார்ஷ்
ஐபிஎல் தொடரில் முதல் சீசனான 2008ஆம் ஆண்டில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக விளையாடிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் 616 ரன்கள் அடித்து டாப் ஸ்கோரராக இருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 139.69 ஆகும்
மேத்யூ ஹெய்டன்
2009 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனராக களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் 12 போட்டிகளில் 572 ரன்கள், 144.81 ஸ்டிரைக் ரேட்டுடன் எடுத்தார்
சச்சின் டென்டுல்கர்
இந்தியாவின் ஜாம்பவான் வீரர் சச்சின் டென்டுல்கர் இந்த சீசினில் 15 போட்டிகளில் 618 ரன்கள், 132.61 ஸ்டிரைக் ரேட் மற்றும் 47.53 சராசரியுடன் அடித்தார்
கிறிஸ் கெய்ல்
2011, 2012 என இரு சீசன்களிலும் தொடர்ச்சியாக ஆரஞ்சு தொப்பியை வென்று சாதித்தார் ஆர்சிபி அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல்.
2011 சீசனில் 12 போட்டிகளில் 608 ரன்கள், 183.13 ஸ்டிரைக் ரேட் மற்றும் 67.55 சராசரியும், 2012 சீசனில் 15 போட்டிகளில் 733 ரன்கள், 160.74 ஸ்டிரைக் ரேட் மற்றும் 61.08 சராசரியாக வைத்திருந்தார்.
மைக் ஹஸ்ஸி
2013 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மைக் ஹஸ்ஸி 17 போட்டிகளில் 733 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி 52.35, ஸ்டிரைக் ரேட் 129.5 என இருந்தது.
ராபின் உத்தப்பா
2014 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா 16 போட்டிகளில் 660 ரன்களை 44 சராசரி மற்றும் 137.78 ஸ்டிரைக் ரேட்டுடன் அடித்தார்
டேவிட் வார்னர்
2015, 2017, 2019 என மூன்று முறை ஐபிஎல் போட்டிகளில் டாப் ஸ்கோராக இருந்து அதிக முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரராக டேவிட் வார்னர் உள்ளார்.
சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 14 போட்டிகளில் 562 ரன்கள் 2015 சீசனில் அடித்தார். இதைத்தொடர்ந்து 2017 சீசனில் அதே சன் ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்த வார்னர் 14 போட்டிகளில் 641 ரன்கள் அடித்தார்.
2019 சீசனிலும் சன் ரைசர்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் 692 ரன்கள் அடித்து மாஸ் காட்டினார்
விராட் கோலி
இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக விராட்கோலி அடித்த 973 ரன்களே உள்ளன. 2016 சீசனில் மட்டும் 16 போட்டிகளில் இவ்வளவு ரன்களை அடித்த கோலி 81.08 சராசரியும், 152.03 ஸ்டிரைக் ரேட்டும் பெற்றிருந்தார். இந்த சீசனில் மட்டும் அவர் 4 சதங்களை அடித்தார்.
கேன் வில்லியம்சன்
நிதானமான பேட் செய்து ரன்களை குவிப்பதில் வல்லவராக இருந்து வரும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், 2018 சீசனில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கி 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்தார்.
கேஎல் ராகுல்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2020 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக களமிறங்கிய கேஎல் ராகுல் 14 போட்டிகளில் 670 ரன்கள் அடித்தார்
ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் 20214 சீசனில் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன் வசமாக்கினார்
ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நான்கு சதம், நான்கு அரைசதம் என 2022 சீசனில் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில் 863 ரன்கள் 57.53 சராசரியுடன் அடித்தார்
சுப்மன் கில்
இறுதியாக நடப்பு ஆரஞ்சு தொப்பி வெற்றியாளராக குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் சுப்மன் கில் உள்ளார். இவர் கடந்த சீசனில் 890 ரன்கள் அடித்து வெறித்தனமான பார்மில் இருந்தார்.
இதுவரை நடந்து முடிந்திருக்கும் 16 ஐபிஎல் சீசன்களில் 8 இடது கை, 8 வலது கை பேட்ஸ்மேன்கள் ஆரஞ்சு தொப்பியை வென்றுள்லனர். அத்துடன் அதிக முறையாக இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னரும், அதிக முறை வென்ற நாடுகளில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களும் இடம்பிடித்துள்ளார்கள்.
ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர்களில் அதிக முறை வென்றவராக டேவிட் வார்னரும், அதிக ரன்கள் அடித்தவராக விராட் கோலியும் தனித்துவ சாதனை புரிந்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்