Sachin Tendulkar Record: சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!
Jan 06, 2024, 03:26 PM IST
Sachin Tendulkar Record: புதன்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார், சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்தின் நெல்சனில் புதன்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
சௌமியா 151 பந்துகளில் 111.92 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 169 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் நியூசி., பந்துவீச்சை எதிர்த்து இடது கை பேட்ஸ்மேன் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார்.
நியூசிலாந்திற்கு எதிரான அவரது ஆட்டம் அதிரிபுதிரியாக இருந்தது, நியூசிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டெண்டுல்கரின் மைல்கல்லை முறியடிக்க இந்த ஸ்கோர் உதவியது. 2009 ஆம் ஆண்டில், கிறிஸ்ட்சர்ச்சில் நியூசி.,க்கு எதிராக 'மாஸ்டர் பிளாஸ்டர்' ஆட்டமிழக்காமல் 163 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களையும் செளமியா பதிவு செய்தார்.
சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மழை புகுந்ததால் டிஎல்எஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முடிவில் நியூசிலாந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
2வது ஒரு நாள் கிரிக்கெட் இன்று நெல்சனில் நடந்தது. அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் (151 பந்துகளில் 169 ரன்கள்) விளாசி அசத்தினார், ஏனெனில் மற்ற எந்த வீரர்களும் 50 ரன்களைக் கடக்க முடியவில்லை. நியூசி., பந்துவீச்சை எதிர்த்து இடது கை பேட்ஸ்மேனான செளமியா சர்க்கார், 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (57 பந்துகளில் 45 ரன்கள்) மிடில் ஆர்டரில் முக்கிய பங்கு வகித்து, அந்த அணி 291 ரன்களை குவிக்க உதவினார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி மற்றும் வில்லியம் ஒரூர்க் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இவர்களைத் தவிர ஆடம் மில்னே, ஜோஷ் கிளார்க்சன், ஆதித்யா அசோக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 292 ரன்கள் என்ற ரன் வேட்டையில், வில் யங் (94 பந்துகளில் 89 ரன்கள்) மற்றும் ஹென்றி நிக்கோலஸ் (99 பந்துகளில் 95 ரன்கள்) கொடுக்கப்பட்ட இலக்கை எட்ட உதவினர். ரச்சின் ரவீந்திரா (33 பந்துகளில் 45 ரன்கள்) சமீப காலங்களில் மிகவும் திறமையான இளம் வீரராக ஏன் கருதப்படுகிறார் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
கேப்டன் டாம் லாதம் (32 பந்துகளில் 34* ரன்கள்) மற்றும் டாம் ப்ளன்டெல் (20 பந்துகளில் 24 ரன்கள்) ஆகியோர் இறுதிகட்ட ரன்களை எடுத்து வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.
வங்கதேசத்தின் பந்துவீச்சு தாக்குதல் ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும், ஷோரிபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ரிஷாத் ஹொசைன் தனது 9.2 ஓவரில் 62 ரன்களை விட்டுக்கொடுத்ததால், அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளரானார்.
சௌமியா சர்க்கார் தனது அபாரமான ஆட்டத்தால் 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று வென்றுள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நேபியரில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
டாபிக்ஸ்