தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Eng Results: தடுமாறிய இங்கிலாந்து..தட்டி தூக்கிய ஆஸ்திரேலியா..36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Aus vs ENG Results: தடுமாறிய இங்கிலாந்து..தட்டி தூக்கிய ஆஸ்திரேலியா..36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Karthikeyan S HT Tamil

Jun 09, 2024, 07:44 AM IST

google News
T20 World Cup 2024 AUS vs ENG: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
T20 World Cup 2024 AUS vs ENG: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

T20 World Cup 2024 AUS vs ENG: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், பார்படாசின் பிரிட்ஜ்டவுன் நகரில் இன்று நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சிறப்பான துவக்கம்

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி 4.5 ஓவர்களில் 70-0 என்று மிரட்டலான தொடக்கத்தை ஏற்படுத்தியது. வார்னர் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்திருந்த நிலையில் அவுட் ஆனார். ஹெட் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

201 ரன்கள் குவிப்பு

அடுத்துவந்த கேப்டன் மிச்சேல் மார்ஷ் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னஸ் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் கிறிஸ் ஜோர்டன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

கடின இலக்கு

இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் துவக்கம் கொடுத்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். சால்ட் 23 பந்துகளில் 37 ரன்கள் குவித்த நிலையில் சாம்பா பந்து வீச்சில் அவுட் ஆனார். கேப்டன் பட்லர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்கள் குவித்த நிலையில் சாம்பா பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

இங்கிலாந்து அணி தடுமாற்றம்

10-வது ஓவரில் இங்கிலாந்து 92-2 என்று இருந்தது. மிடில் ஆர்டரில் வந்த இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் குரூப் பி-யில் முதலிடத்திற்கு முன்னேறியது. ஓமன் மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடன் இங்கிலாந்து வெற்றி பெறவில்லை.

நெதர்லாந்து வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

நியூயார்க்கில் டேவிட் மில்லர் லாங் ஐலேண்டில் நடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. மில்லர் 51 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. 7 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய தென் ஆப்பரிக்கா, குரூப் டி பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க்கில் இன்று (ஜூன் 09) நடைபெற இருக்கிறது. இதுதவிர வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா, ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று நடைபெற இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி