ISPL: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணி உரிமையாளரானார் அமிதாப் பச்சன்
Dec 18, 2023, 12:19 PM IST
Amitabh Bachchan: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் மும்பை அணியின் உரிமையாளராக நடிகர் அமிதாப் பச்சன் ஆனார்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) மும்பை அணியின் உரிமையாளரானார் பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன்.
ஐஎஸ்பிஎல் என்பது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து டி10 கிரிக்கெட் போட்டியாகும், இது மைதானத்தில் விளையாடப்படும் என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க பதிப்பு மார்ச் 2 முதல் மார்ச் 9 வரை மும்பையில் நடைபெற உள்ளது.
ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் இந்தப் போட்டியில் பங்குபெறும். இந்த போட்டியில் 19 அதிக தீவிரம் கொண்ட போட்டிகள் இடம்பெறும்.
லீக்கின் ஒரு பகுதியாக இருப்பது தனக்கு ஒரு புதிய தொடக்கத்தை தந்திருக்கிறது என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறினார்.
ISPL ஒரு அற்புதமான மற்றும் உன்னதமான சிந்தனை என்று அவர் விவரித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
தெருக்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்திவரும் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு, இப்போது தொழில்ரீதியாக ஒரு அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு முன் முறையான அமைப்புகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு! என்று அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் முறையே ஸ்ரீநகர் மற்றும் பெங்களூரு அணி உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.