தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Lakshmipathy Balaji: பாகிஸ்தான் ரசிகர்களைச் சம்பாதித்த இந்தியன்.. 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் லட்சுமிபதி பாலாஜி ஜொலித்த கதை!

Lakshmipathy Balaji: பாகிஸ்தான் ரசிகர்களைச் சம்பாதித்த இந்தியன்.. 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் லட்சுமிபதி பாலாஜி ஜொலித்த கதை!

Marimuthu M HT Tamil

Sep 27, 2024, 06:31 AM IST

google News
Lakshmipathy Balaji: பாகிஸ்தான் ரசிகர்களைச் சம்பாதித்த இந்தியன்.. 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் லட்சுமிபதி பாலாஜி ஜொலித்த கதையை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.
Lakshmipathy Balaji: பாகிஸ்தான் ரசிகர்களைச் சம்பாதித்த இந்தியன்.. 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் லட்சுமிபதி பாலாஜி ஜொலித்த கதையை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

Lakshmipathy Balaji: பாகிஸ்தான் ரசிகர்களைச் சம்பாதித்த இந்தியன்.. 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் லட்சுமிபதி பாலாஜி ஜொலித்த கதையை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

Cricketer Lakshmipathy Balaji: தமிழ்நாட்டிற்கே உரிய கருப்பு நிறம், ஒல்லியான தேகம், தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ரஜினியைப் போன்ற தோற்றம் என இருக்கும் நபர் ஒருவர் உலக தரவரிசை கிரிக்கெட் போட்டிகளில்,அதே ரஜினி ஸ்டைலில், பந்துவீசினார் என்றால் அது லட்சுமிபதி பாலாஜியாகத் தான் இருக்கக்கூடும். இதை அவர் தனது பேட்டியில் கூட ஒருமுறைப் பதிவு செய்திருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடைப் பூர்வீகமாகக் கொண்டவர், லட்சுமிபதி பாலாஜி. கடந்த 2003ஆம் ஆண்டு, நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டு, 4 ஓவர்களுக்கு 44 ரன்கள் கொடுத்தார். பின், சில காலம் அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்தார். இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் லட்சுமிபதி பாலாஜி சராசரியாக விளையாண்டார். அதன்பின் தான், லட்சுமிபதி பாலாஜியின் காலம் உருவானது.

பாகிஸ்தான் ரசிகர்களைச் சம்பாதித்த லட்சுமிபதி பாலாஜி:

1989-90 காலகட்டத்திற்குப் பிறகு, முதன்முறையாக 2004ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் நடந்த போட்டியில், இந்தியா சென்று விளையாடியது. அதில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது லட்சுமிபதி பாலாஜி இந்தியாவின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

இது அவருடைய வாழ்வின் பொக்கிஷமான காலகட்டம் எனலாம். அங்கு அவர் 63 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார். இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் 12 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

பந்தை ஸ்விங் செய்து வீசும் அவரது திறமை, அவரது அசாதாரண பேட்டிங் பாணி மற்றும் பரந்த புன்னகையுடன் எதிராளியை அணுகுவது ஆகியவை லட்சுமிபதி பாலாஜியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. குறிப்பாக, பாகிஸ்தான் மக்களிடமும் தான்.

அதன்பின், இந்தியாவில் விளையாட வந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியில், 2005ஆம் ஆண்டு காயம் காரணமாக 5 விக்கெட்களை மட்டும் எடுத்துவிட்டு வெளியேறினார்.

காயம் தந்த ட்விஸ்ட்.. சி.எஸ்.கேவின் முதல் ஹாட்ரிக் விக்கெட்:

எல்.பாலாஜி அச்சுறுத்தும் காயத்தால் பாதிக்கப்பட்டபோது, கிரிக்கெட்டில் அவரது வாழ்க்கை கேள்விக்குறி என்று பலரும் பேசினர். அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டு எழுந்த பாலாஜி, 2008ஆம் நடந்த ஐபிஎல் முதல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ஐபிஎல்லில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் பெற்று, சிஎஸ்கே அணிக்குப்பெருமை சேர்த்தார். அதேபோல், ரஞ்சி டிராபி தொடரிலும் கவனம் செலுத்தி விளையாடிய லட்சுமிபதி பாலாஜி, சிறந்த ஃபார்மைப் பெற்றார். இதனால், 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரானத் தொடரில் பாலாஜி மீண்டும் பந்துவீசினார். காயமடைந்த முனாஃப் படேலுக்கு மாற்றாக, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியிலும் லட்சுமிபதி பாலாஜி சேர்க்கப்பட்டார்.

லட்சுமிபதி பாலாஜியின் விரைவான பந்துவீச்சு நடவடிக்கை பெரும்பாலான பேட்ஸ்மேன்களை திணறடித்தது எனலாம். பவுன்சர், யார்க்கர் ஆகியவற்றை மிகவும் லாவகமாக வீசினார், பாலாஜி. அவ்வப்போது பந்துவீச்சின்போது ஸ்விங் செய்வதையும் அவர் தவறவில்லை.

ஐபிஎல் சீசனின் முதல் மூன்று சீசன்களுக்கு சென்னை அணிக்கு விளையாடிய லட்சுமிபதி பாலாஜி, 2011ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார்.

இறுதிப்போட்டி:

நல்ல ஃபார்மில் இருந்த பாலாஜி, 2012ஆம் ஆண்டு,20-20 உலகக் கோப்பைப்போட்டியில், விளையாடினார். அதன்பின் 2012ஆம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் பாலாஜி பந்துவீசினார். இதுவே, அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. அதன்பின் 2014ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில், பாலாஜி பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடினார். காயமும் காலமும் செய்த கோலத்தால், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் கோச்சாக உள்ளார், அதே தனது ட்ரேட் மார்க் சிரிப்புடன்.

துறு துறு வேகத்திலும் பாகிஸ்தானின் பந்துவீச்சாளர் சோயப் அக்தருக்கு இணையாகப் பேசப்பட்ட லட்சுமிபதி பாலாஜிக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகளைக் கூறுவதில் பெருமை கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை