Tirupati Laddu: இனி இயற்கை விவசாயம் மூலம் தயாராகும் திருப்பதி லட்டு பிரசாதம்!
Apr 17, 2023, 04:27 PM IST
இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் செய்ய உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
உலகிலேயே பணக்கார கடவுள் என திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் அழைக்கின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்ய வெளி மாநிலங்களில் இருந்து தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
சமீபத்திய புகைப்படம்
தற்போது கோடை கால விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக சுவைமிகுந்த இரண்டு லட்டுகள் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் செய்ய உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி , நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் கூட்டம் முடிந்ததை தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு அந்த பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் செய்ய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கு விலை பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகவும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.