கன்னி சாமிகள் கவனிக்க வேண்டிய பூஜை முறைகள் - குருசாமி பாடகர் வீரமணி ராஜூ கூறும் அறிவுரைகள்
Nov 18, 2024, 11:31 AM IST
கன்னி சாமிகள் கவனிக்க வேண்டிய பூஜை முறைகள் - குருசாமி பாடகர் வீரமணி ராஜூ கூறும் அறிவுரைகள் பற்றிப் பார்ப்போம்.
கன்னி சாமிகள் கவனிக்க வேண்டிய பூஜை முறைகள் குறித்து குருசாமி பாடகர் வீரமணி ராஜூ கூறும் அறிவுரைகள் குறித்துப் பார்ப்போம்.
சமீபத்திய புகைப்படம்
கன்னி சாமிகள் கவனிக்க வேண்டிய பூஜை முறைகள் பற்றி நியூஸ் டி.என். யூட்யூப் சேனலுக்கு குருசாமி பாடகர் வீரமணி ராஜூ கூறியதாவது, ‘’ஐயா. எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஐயப்பனின் சகஸ்கரநாமம் தெரியாது. ஐயப்பனின் ஸ்தோத்திரங்கள் தெரியாதுன்னு சொல்வாங்க. அதுபற்றி எங்க குருசாமி சொல்றாங்க. ’சரணம் விளித்தால் மரணமில்லை. சாஸ்தா நாமம் அருளில் எல்லை’ அப்படின்னு ஒரு பாட்டு. ஐயப்பன் மிக எளிமையான தெய்வம். நீங்கள் எந்தமொழியில் எதைக்கேட்டாலும் தரக்கூடியவர், ஐயப்பன். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதற்கு பத்து மடங்காக கிடைக்கும். அதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
நம்பியார் சுவாமி சொல்வார், சுவாமியே சரணம் ஐயப்பா என உச்சஸ்தாயிலில் சொல்லணும். இப்படி சொல்வதால் உங்களுடைய நரம்புசார்ந்து தலையில் இருந்து பாதம் வரை இருக்கும் பிரச்னைகள் சரியாகிடும் என்பார். இதனை சபரிமலைக்கு மாலைபோடும்போது தினமும் இருவேளை சொல்லணும்.
பணிச்சூழல் இப்படி இருந்தால் எப்படி பூஜை செய்வது?:
பக்தர்கள் சிலருக்கு சில சந்தேகம் வரும். பணிமுடித்து வீட்டிற்கு வரத் தாமதம் ஆகிறதே என்பார்கள். அதன்பின், எப்படி குளிக்கலாமா, பூஜை செய்யலாமா எனக் கேட்பார்கள். தாராளமாக குளிக்கலாம். ஐயப்பனுக்கு நேரம், காலம் பார்க்க வேண்டாம். நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு சரணம் சொல்லுங்கள்.
கன்னிசாமிமார்கள் பூஜை செய்வது எப்படி, கண்டிப்பாக நிறையபேருக்கு சாப்பாடு போடணுமா அப்படி சில பக்தர்கள் கேட்பார்கள். வசதி இருக்கிறவங்க அப்படி செய்யட்டும். வசதியில்லாத கூலித்தொழிலாளி என்ன செய்யமுடியும்.
அவரவர் வசதிக்கு ஏற்ப கன்னி சாமிகள் அன்னதானம் செய்யலாம். இவ்வளவு தான் செய்யவேண்டும் என்று இல்லை. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஐயப்பனுக்கு அன்னதான பிரபு என்பார்கள். ஆனால், நம்மை வருத்திக்கொண்டு, பொண்டாட்டியின் தாலியை அடமானம் வைத்து எந்த தானமும் செய்யவேண்டும் என்று எந்தக்கடவுளும் சொல்லவில்லை.
இப்படி கடன்வாங்கி அன்னதானம் செய்வதை ஐயப்பன் ஏற்பதில்லை. உங்களால் நான்கு பேருக்கு வாங்கித் தரமுடியுமா ஏழையாக இருக்கும் நபர்களுக்கு அதை வாங்கிக்கொடுங்கள்.
கன்னி சாமிக்கு ஐயப்பன் துணை உண்டு:
கன்னிசாமி என்றால் ஐயப்பனுக்கு மிக ஸ்பெஷல். ஐயப்பன் மகிஷியை சம்ஹாரம் செய்தபிறகு, நீலாவதி என்ற பெண்ணாக மாறும்போது, ஐயப்பனைக் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்வார். அதற்கு சிலர் சொல்வார்கள் நீலாவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்வதாக வாக்களித்தார் என்பார்கள். எப்படி வாக்களித்திருப்பார். தெய்வம் எப்படி பொய் சொல்லும்.
இந்த அவதாரத்தில் ஐயப்பன் தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம். ஐயப்பனுக்கு 8 அவதாரம் இருப்பதாக பழம்பெரும் பாடல் கூறுகிறது. கிராமங்களில் கூறும் சொல்வார்களே சாஸ்தா என்று. அது ஐயப்பனின் அவதாரங்களில் ஒன்று தான். திருநெல்வேலி மாவட்டம், சொரிமுத்து அய்யனார் கோயில் தான், ஐயப்பனின் ஆதிகோயிலாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு அவதாரத்தில் ஐயன் பூர்ணை மற்றும் புஷ்கலா தேவியை திருமணம் செய்துகொண்டதாக வரலாறு உண்டு. ஏன், அந்த வரலாறிலேயே அவர்களுக்கு குழந்தை இருந்ததாக சொல்லப்படுவதுண்டு.
ஐயப்பன் அச்சன்கோயிலில் ஒரு உருவமாகவும், ஆரியங்காவில் இளைஞராகவும், குளத்துப்புழையில் ஐயப்பன் குழந்தையாகவும், பந்தளத்தில் பார்த்தால் ஐயப்பன் பன்னிரெண்டு வயது சிறுவனாகவும் இருக்கிறான். ஆனால், சபரிமலையில் இந்த கலியுகத்தில் தர்மசாஸ்தாவாக இருக்கிறார்.
சபரிமலை கதைப்படி பார்த்தால், என்றைக்கு தன்னைப் பார்க்க கன்னிசாமிகள் வராமல் இருக்கிறார்களோ, அந்த வருடம் நீலாவதியை மணமுடித்துக்கொள்வதாக ஒரு கதை இருக்கிறது. அதனால், கன்னி சாமிமார்களுக்கு ஐயப்பனின் முக்கியத்துவம் மிக அதிகம்.
எனவே, கன்னிமார்கள் அன்னதானம் கொடுக்கவில்லை என்றால் பாவம். சரியான தரிசனம் கிடைக்காது. சபரிமலை பயணத்தில் ஆபத்து வரும் என்று யாராவது சொன்னால், தயவு செய்து, அதைக் காதில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பக்தி தான் முக்கியம். கன்னி சாமிமார்களுக்கு ஐயப்பன் துணை இருப்பார்’’ எனப் பேசி முடித்தார், குருசாமி பாடகர் வீரமணி ராஜூ.
நன்றி: குருசாமி பாடகர் வீரமணி ராஜூ அவர்கள் மற்றும் நியூஸ் டி.என். யூட்யூப் சேனல்
டாபிக்ஸ்