மக்களே குட் நியூஸ்.. இவ்வளவு நாள் கொளுத்திய வெயிலில் இருந்து விடுதலை.. இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்!
தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு
தமிழகத்தில் (கோயம்புத்தூர் மாவட்டத்தில்) மிக லேசான மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருந்தது.
தமிழக உள் மாவட்டங்களில் (கரூர் மற்றும் தருமபுரியில்) ஓரிரு இடங்களில் இயல்பை விட + 4.5° செல்சியஸ் மிக மிக அதிகமாக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெப்ப அலை நிலவியது.
தமிழக உள் மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிக பட்ச வெப்பநிலை சேலத்தியில் 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், வேலூரில் 40.8° செல்சியஸ், தருமபுரியில் மற்றும் ஈரோட்டில் 40.7° செல்சியஸ், திருச்சியில் 40.5° செல்சியஸ், திருத்தணி மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மதுரை (நகரம் & விமான நிலையம்), சென்னை மீனம்பாக்கம், கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 23° – 28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 36.7° செல்சியஸ் (இயல்பை விட +2.4° செல்சியஸ் அதிகம்) மற்றும் மீனம்பாக்கத்தில் 39.6° செல்சியஸ் (இயல்பை விட +4.3° செல்சியஸ் மிக அதிகம்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
08.04.2024 மற்றும் 09.04.2024: தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10.04.2024 மற்றும் 11.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
12.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13.04.2024 : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
08.04.2024 முதல் 11.04.2024 வரை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
08.04.2024 முதல் 11.04.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
08.04.2024 முதல் 11.04.2024 வரை:
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

டாபிக்ஸ்