தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nirmala Devi: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Nirmala Devi: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Kathiravan V HT Tamil
Apr 30, 2024 05:24 PM IST

”நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் உடனடியாக தண்டனையை அறிவிக்க கூடாது, தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி நிர்மலா தேவி வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்து இருந்தார்”

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நேற்றைய தினம் (ஏப்ரல் 29) ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு  அளித்து இருந்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஆக இருந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேரம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செல்வாக்குடன் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் சிலருக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை உயர்கல்வித்துறையில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்காக பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்று உள்ளார்.

இது தொடர்பாக கல்லூரி மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசும் ஆடியோவை ரெக்கார்ட் செய்த மாணவிகள், பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்து இருந்தனர். ஆனால் அதை கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், அந்த ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மதுரை காமரஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.

இந்த வழக்கில் ஆளுநர் மாளிகையில் தொடர்புடையவர்களின் பெயர்களும் அடிபட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தார். இதனால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், விபச்சார தடுப்பு சட்டம், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டன.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவி பேசிய மாணவிகளிடம் உயர் காவல் அதிகாரிகள் வாக்குமூலங்களை பெற்றனர்.

இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பு தேதி இன்றைய தினம் ஒத்திவைக்கபட்டது.

தீர்ப்பு நாளையொட்டி முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் நிர்மலா தேவி மட்டும் ஆஜர் ஆகவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு அளித்து உள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்பு உடைய 2வது மற்றும் 3வது குற்றவாளிகள் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் உடனடியாக தண்டனையை அறிவிக்க கூடாது, தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி நிர்மலா தேவி வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்து இருந்தார். 

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று வாசித்தார், இதில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்