தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ponmudi Case: நில ஆக்கிரமிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

Ponmudi Case: நில ஆக்கிரமிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 06, 2023 10:47 AM IST

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட நில அபகரிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி

ட்ரெண்டிங் செய்திகள்

நில அக்கிரமிப்பு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்று கூறி அமைச்சர் பொன்முடியை உள்ளிட்ட 7 பேரை விடுவித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர் பொன்முடி கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001 வரை திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் சைதாபேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை அபகரிக்க திட்டமிட்டதாக கடந்த 2003ம் ஆண்டு புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அந்த பகுதியில் சட்ட விரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்பவரை வெளியேற்றியதாகவும் போலியாக ஆவணங்கள் தயாரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. போலியாக தயாரித்த ஆவணங்களின் படி தனது மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு புதிய கட்டிடம் கட்டியதாகவும் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பொன்முடி மாமியார், அப்போதைய அடையாறு பதிவாளர் புருபாபு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்கு பதிவு செய்தனர். விசாரணை முடிந்த நிலையில் 2.9.2004ல் பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதில் தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் பொன்முடி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 26.4.2007 அன்று அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் 6.9.2017அன்று ரத்து செய்தது.

இதையடுத்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எம்.பி, எம்.எல்ஏக்கள் மிதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.

இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது. 180க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி பொன்முடி உட்பட 7 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்