Palani Temple Entry: 'பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை சுட்டிக்காட்டுவது எதை?'-பிரபல வழக்கறிஞர் கருத்து
Palani Temple Entry Judgement: ‘வழிபாட்டுத்தலங்கள் போராட்டங்களுக்கான இடங்களாக மாறக்கூடாது, மாறாக அது மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் இருந்து விடுபட அவர்களுக்கு மன நிம்மதியும் அமைதியும் தரும் புனித இடமாக இருக்க வேண்டும்.’
பழனி கோயிலுக்குள் இந்து மதத்தினர் அல்லாதவர்கள் நுழைவதற்கு விதித்த தடை குறித்த சமீபத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் விவாதங்களைத் எழுப்பியுள்ளது. இந்த தீர்ப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், பிற மதத்தினர் கோவிலுக்குள் செல்ல விரும்பும் பட்சத்தில், அவர்கள் கோவில் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக கோவிலுக்குள் செல்ல விருப்பப்படுகிறேன் என்று அதில் உறுதி மொழி அளித்த பின்னர் அந்த நபரை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்பதே. அதோடு, இந்த தீர்ப்பு இந்து மக்களின் மத சுதந்திரத்தை, குறிப்பாக இந்துக்கள், கோவில்களை அவர்களின் பழக்க வழக்கங்களின் படி நிர்வகித்து காப்பாற்றுவதற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்துகின்றது.
எனினும், பழனி கோவில் தீர்ப்பானது, மத பாகுபாடுகளை உள்ளடக்கியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது விவாதத்திற்குரியதாகிறது. சாதி வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் கோவில் அர்ச்சகராக முடியும் என்ற நிலைக்கு நாம் நகர்ந்து செல்வது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தலித்துகள் கோவிலுக்குள் செல்வதை தடுக்கும் பாகுபாடு இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. நமது வரலாற்றை பின்னோக்கி பார்க்கும்போது, திருவிதாங்கூர் கோவில் நுழைவு போராட்டத்தில் தலித் மக்கள் கோவிலுக்குள் செல்வதற்கான உரிமைக்காக போராடினர். கிட்டத்தட்ட நூறாண்டு கழித்து, இன்றும் கோவிலுக்குள் செல்வது தொடர்பான அதே பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். பிற மதத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்காத அதே வேளையில், இந்து மதத்தை சார்ந்த தலித்துகள் கோவில்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது , மதத்திற்குளே உள்ள பாகுபாடுகளை வெளிப்படுத்துகின்றது. சில கோவில்களில் பெண்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது என்பது, இந்து மதத்திற்குள் பாகுபாடு இருப்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. எல்லா மதங்களும் அதற்கான அடையாளத்தை இழக்காமல், தனக்கான மரபுகளை எவ்வாறு பாதுகாத்து, எல்லைகளை வரையறுப்பது எப்படி என்ற கேள்விகளுடன் போராடுகிறது.
உச்ச நீதிமன்றமும் இதே போன்ற பிரச்சனைகளை பல்வேறு தீர்ப்புகளில் எடுத்துக்காட்டியுள்ளது. குறிப்பாக சபரிமலை தீர்ப்பை இங்கே குறிப்பிடலாம். சபரிமலை வழக்கின் தீர்ப்பில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய உரிமை உண்டு, மேலும் அவர்களை கோவிலில் நுழைவதைத் தடுப்பது அரசமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சபரிமலை தீர்ப்பு ஒரு பரந்த சமூக மாற்றத்தை குறிக்கிறது. ஆனால் இது போன்ற தீர்ப்புகள் இந்து மதத்திற்கு மட்டும் தானா?
சபரிமலை கோவிலில் பெண்களின் நுழைவுத்தடை போன்ற பிரச்சனைகளை பேசும்போது, இந்து விவாதம் இந்து மதத்திற்குள் மட்டும் நின்று விடக்கூடாது, ஏனென்றால் இது எல்லா மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரலாறு முழுவதும் அனைத்து மதங்களிலும் ஏதோ ஒரு வகை பாகுபாடு இருந்து வருகிறது. இச்சூழலில், மற்ற மதங்களுடன் ஒப்பிடும் போது, இந்து மதம் சீர்திருத்தத்தை அதிகமாகவே ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை வரலாறு குறிப்பிடுகின்றது. வழிபாட்டுத்தலங்களை ஒழுங்குபடுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியதில் இது மேலும் தெளிவாகியது. கோவில் நிர்வாகத்திற்குள் பாகுபாடுகளை களைந்து, மதநெறிகளுக்கு உட்பட்ட மத சுதந்திரத்தை ஜனநாயக முறைப்படி பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படைத்தன்மையுடன் பங்காற்றுகிறது.
பொதுவாக இந்த பிரச்சனைகளை கையாள்வதில், மதச்சார்பின்மை என்ற தத்துவம் நமக்கு வழிகாட்டும். மதச்சார்பற்ற தன்மையை ஏற்றுக் கொள்வது என்பது திறந்த மனதோடு கலந்துரையாடி பிறருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு, வேறுபட்ட மதநம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்தி அனைவரையும் உள்ளடக்குவதே ஆகும். அனைவரையும் உள்ளடக்குவது என்பது பிற கலாச்சாரங்களை ஒழிப்பதையோ அல்லது அனைவரையும் ஒரே கலாச்சாரத்தில் பழக்கவழக்கத்தில் மாற்றுவதோ அல்ல. மாறாக, சமூகத்தில் ஒன்றாக வாழ்வதற்கான பல்வேறு வாழ்க்கை முறைகளுக்கு இடையே கலந்துரையாடுவதும் அதனை புரிந்து கொள்வதும் அதற்கான இடம் அளிப்பதே ஆகும்.
வழிபாட்டுத்தலங்கள் போராட்டங்களுக்கான இடங்களாக மாறக்கூடாது, மாறாக அது மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் இருந்து விடுபட அவர்களுக்கு மன நிம்மதியும் அமைதியும் தரும் புனித இடமாக இருக்க வேண்டும். மேலும் வழிபாட்டுத் தலங்கள், நம்பிக்கையாளர்களின் ஆன்மீக பலத்துக்கு ஆதாரமாக செயல்படுகின்றன. எனவே இதை அரசியல்படுத்துவது என்பது, மக்களை வேறு வழியில் திசை திருப்பும். ஆதலால் கோவிலில் அனைவரையும் சமமாக நடத்துவதை உறுதி செய்வது அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் உள்ள கடமையாகும்.
சமீபத்திய தீர்ப்பு இந்தியாவில் உள்ள மத மற்றும் சமூகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. இந்துக்கள் தங்கள் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு. அதே வேளையில், சமத்துவம், மத சுதந்திரம் மற்றும் சமூக நீதி பற்றிய முக்கியமான கேள்விகளையும் இந்த தீர்ப்பு எழுப்புகிறது. இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட சமூகமாக முன்னேறி வரும் நிலையில், இத்தகைய தீர்ப்புகள் மக்கள் அனைவருக்கும் நீதி மற்றும் சமதர்மத்தை வழங்குகிறது. அதேபோல மதத்திற்குள் இருக்கும் அனைத்து பாகுபாடுகளும் களையப்பட வேண்டும்.
-எம்.கார்த்திகேயன்,
சென்ட்ரல் கவர்ன்மென்ட் பேனல் சீனியர் வழக்கறிஞர்
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.