Sanatana Dharma: ’சனாதன சர்ச்சை! உதயநிதியை பதவிநீக்கம் செய்ய முடியாது!’ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
”இந்து அறநிலையத்துறை இது போன்ற மாநாட்டில் கலந்து கொண்டிருக்க கூடாது என்று கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்துள்ளார்”

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை பதவிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் திமுக எம்.பியான ஆ.ராசாவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
இந்த பேச்சுகளுக்கு எதிராக எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்பியும் அவர்களை பதவியில் இருந்து தகுதி நீக்கக் செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கோவாரண்டோ வழக்கு தொடக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, கோயில்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்துக்களை அரசு மீட்பதால் அதில் பாதிப்பட்ட இந்து முன்னணி வழக்கு தொடர்ந்து இருப்பதாக வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வாசித்த நீதிபதி அனிதா சுமந்த், உயர் பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதற்கு முன் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை சரிபார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்ததுதான். ஆனால் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், இந்து அறநிலையத்துறை இது போன்ற மாநாட்டில் கலந்து கொண்டிருக்க கூடாது என்று கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்துள்ளார்.
