தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - பரபரக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம்

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - பரபரக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம்

Karthikeyan S HT Tamil
Feb 20, 2023 12:40 PM IST

OPS Meeting in Chennai: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி தலைமை கழக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்,
சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்,

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்த ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் இரட்டை இலை யாருக்கு என்ற குழப்பம் நிலவியது.

இரட்டை இலை சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்று, இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். எனினும், அவரது தரப்பில் வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் தேர்தலில் அவர் பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “எந்த அளவுக்கு அதிமுகவின் சட்டவிதிகளை சிதைக்க முடியுமோ, அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்தனர். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். நாம் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் சென்றுகொண்டிருக்கிறோம். 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது. தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள்தான் உள்ளன.” என்றார்.

வைத்திலிங்கம் பேசுகையில், “ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைப்பாளருக்குத் தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் உழைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்