தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Governor Rn Ravi Will Administer The Oath Of Office To Ponmudi As A Minister This Evening

Ponmudi vs RN Ravi: பொன்முடிக்கு இன்று மாலை பதவி பிரமாணம்! உச்சநீதிமன்ற எச்சரிக்கைக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Kathiravan V HT Tamil
Mar 22, 2024 03:59 PM IST

“Ponmudi vs RN Ravi: இன்று மாலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது”

பொன்முடி
பொன்முடி

ட்ரெண்டிங் செய்திகள்

கிண்டி ராஜ்பவனில் உள்ள அரங்கில் மாலை 3.30 மணி அளவில் எளிமையான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வரும் உயர்கல்வித்துறை மீண்டும் பொன்முடிக்கு தரப்பட உள்ளது. 

வழக்கின் பின்னணி

சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். 

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதிக்கான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதுடன், மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். 

பொன்முடியை அமைச்சராக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். 

இந்த நிலையில் ஆளுநர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு இன்று வரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருந்தது. 

இதுதொடர்பான வழக்கு நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பார்வதிவாலா ஆகியோர் அமர்வு விசாரித்தது.

அப்போது உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் பொன்முடி எம்.எல்.ஏவாக தொடர்கிறார் எனவும்; ஆனால், பொன்முடிக்கு அமைச்சருக்கான பதவிப் பிரமாணத்தை செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி மறுக்கிறார். மேலும், 72 ஆண்டுகளில் எந்த ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டது இல்லை என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பி, பொன்முடிக்கு ஆதரவான தன் வாதத்தை முன்வைத்தார்.

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘’தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பொன்முடிக்கு, பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல. இல்லையென்றால், நாங்கள் அதை இப்போது சொல்லப்போவதில்லை.

ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.

அந்த நபர்/ அமைச்சர் குறித்து எனக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும். ஆளுநர் என்பவர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால், அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூறமுடியும்?.

உங்கள் ஆளுநர் ரவி என்ன செய்துகொண்டிருக்கிறார்? உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் ரவி மறுப்பது ஏன்?. நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்யமுடியாது எனக் கூறமுடியும்?. தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநர் ரவிக்கு தெரியாதா? உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால், அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும்'' என்றார்.

மேலும் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், ‘’பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது யார்?; ஆளுநர் தன் முடிவை அறிவிக்காவிடில் எங்கள் நடவடிக்கை என்ன என்பதை தற்போது நாங்கள் கூறப்போவதில்லை. ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா?. அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை எனில், மாநில அரசு என்ன செய்யும்'’என ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கண்டிப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி பார்திவாலா கூறுகையில், ‘’ஒரு தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டால், அங்கு தண்டனை இல்லை என்றுதான் பொருள். தண்டனையே அங்கு இல்லாதபோது கறைபடிந்தவர் என்று சொல்ல முடியாது. எந்த களங்கமும் இதில் இல்லை’’ என்று பேசினார்.

இன்று மாலை பதவி ஏற்பு

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொன்முடிக்கு இன்று மாலை 3.30 மணி அளவில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்ய உள்ளார். இந்த நிகழ்வுக்கு ஊடகங்கள் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பதவி ஏற்பு வழக்கம்போல் யூடியூப் தளத்த்ல் நேரலை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்