Edapadi Palanisamy: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
Governor R.N.Ravi: தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விவரங்கள் குறித்த பட்டியலும் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உடன் இருந்தனர்.
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக புகார் மனுவை ஆளுநரிடம் வழங்கினார்.
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக திமுக மீதும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விவரங்கள் குறித்த பட்டியலும் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் மாநிலமாகவே தமிழ்நாடு மாறி இருக்கிறது. போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தோம். விரிவான அறிக்கையையும் ஆளுநரிடம் தந்துள்ளோம். தமிழகத்தில் ஒரு துளி போதைப் பொருள் கூட இருக்கக் கூடாது என்று ஆளுநரிடம் தெரிவித்து உள்ளோம். ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து 3ஆண்டுகளாக 45 முறை வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தியுள்ளார். இதன் மூலம் கிடைத்த பணத்தை திரைப்பட தயாரிப்பில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார் என்று கூறினார்.
போதைப் பொருள் கடத்தலில் வந்த பணத்தை வைத்துதான் திமுக தேர்தலை சந்திப்பதாக செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதனிடையே, நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது மத்திய அரசில் நடக்கும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய அரசில் மக்களாட்சி மாண்பைக் காக்கும் மகத்தான புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பாஜக அரசானது, நாட்டையே பல்லாண்டு காலம் பின்னோக்கிக் கொண்டு போய்விட்டது. இதனை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கை நடைபெற்றது.
பாஜகவை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல, அதன் பிறகு அமையப் போகும் அரசானது மக்களாட்சி, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், விளிம்புநிலை மக்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 'இண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டது. அகில இந்தியக் கட்சிகள், மாநிலங்களை ஆளும் கட்சிகள், மாநிலங்களை ஆண்ட கட்சிகளை உள்ளடக்கிய மாபெரும் அணியைத் தொடங்கினோம்.
தங்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற மமதையுடன் இருந்த பாஜக தலைமையானது, அதன் பிறகுதான் களத்தின் உண்மை நிலவரத்தை உணர்ந்தது. 'இந்தியா' என்ற சொல்லையே சொல்லாமல் தவிர்த்தது. 'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளைத் தன்னுடைய அதிகார அமைப்புகளின் மூலமாக பாஜக ஆட்சியானது வேட்டையாடியது. இந்த கூட்டணியின் வலிமையை நாட்டுக்கு உணர்த்தியதே இதுபோன்ற பாஜகவின் சர்வாதிகார நடவடிக்கைகள்தான்.
பத்தாண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. அவரது அவசரகாலப் பதற்றமானது அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது. 'மீண்டும் மோடி' என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், 'வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் இன்று எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இண்டியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள். சில மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டும் விட்டன. சில மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களில் அவையும் நல்லபடியாக நடைபெறும் எனத் தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான 'இண்டியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்றைய தினத்துடன் மிகச் சிறப்பாக முடிவுற்றது என்பதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்