தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kudavasal: அரசுப் பள்ளியில் சேர்ந்தால் ‘தங்க நாணயம்’ பரிசு : அதிரடி அறிவிப்பு!

Kudavasal: அரசுப் பள்ளியில் சேர்ந்தால் ‘தங்க நாணயம்’ பரிசு : அதிரடி அறிவிப்பு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Apr 15, 2023 01:17 PM IST

Kudavasal Govt School: நான்கு வருடத்தில் இதுவரை 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் அரசுப்பள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் அரசுப்பள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ளது சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தங்க காசுகள் பரிசுகள் வழங்கப்படும் என்றும் திடீரென அறிவிக்கப்பட்டது. 

சேர்க்கையில் இடம் பெறும் மாணவ, மாணவிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அந்தப் பள்ளி சார்பில் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு அப்பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளி மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதை 2008 ஆம் ஆண்டு பெற்றுள்ளது. அதேபோன்று கர்மவீரர் காமராஜர் விருது மூலம் 25 ஆயிரம் ரூபாயும், பெற்றோர் ஆசிரியர் கழக விருதாக 50 ரூபாயும் பெற்றுள்ளது. இந்த விருது தொகை முழுவதும் பள்ளியின் உட் கட்டமைப்பு வசதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

 கடந்த நான்கு வருடங்களாக இந்த பள்ளியில் கல்வி சீர் விழா நடைபெற்று வருகிறது. இதில் வருடம் தோறும் பிப்ரவரி மாதம் ஊர் மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கி சீர்வரிசையாக எடுத்து வந்து கொடுக்கும் விழா நடைபெறுவது வழக்கம். 

நான்கு வருடத்தில் இதுவரை 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பள்ளியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தலைமையாசிரியராக இந்திரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மாணவர் அறிமுக விழா போன்றவை நடத்தி, மாணவர் சேர்க்கைக்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். 

அந்த வகையில் இந்த வருடமும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும், மாணவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 15.07.2023 கல்வி வளர்ச்சி நாள் அன்று, தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

 மேலும் இந்த வருடம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச வேன் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துண்டு பிரசுரத்தில் பள்ளியின் சிறப்பம்சங்களாக பாதுகாப்பான உட்கட்டமைப்பு வசதிகள், நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா அரசு நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்க தொகைகள், அரசு வேலையில் முன்னுரிமை போன்ற பல்வேறு சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் உங்கள் அன்பு தங்கத்தை சேர்ப்பீர் தங்க நாணயம் வெல்வீர் என்றும் அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த துண்டறிக்கைகளை தலைமையாசிரியர் இந்திரா அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் போன்றவற்றை ஆசிரியர்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்காக வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 142 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடவாசல் ஒன்றியத்திலேயே அதிக மாணவர் சேர்க்கை இருக்கக்கூடிய பள்ளியாக இந்த பள்ளி இருக்கிறது.

இது குறித்து தலைமை ஆசிரியர் இந்திரா கூறுகையில், ‘‘மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு எங்கள் பள்ளியில் வருடம் தோறும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டில் சேரக்கூடிய மாணவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் வழங்க உள்ளோம், அதேபோன்று பள்ளியில் சேர்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்,  அதேபோன்று ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மழைக்காலங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு ஏதுவாக வேன் வசதி ஏற்பாடு செய்ய விருக்கிறோம்,’’ என்று கூறியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்