தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Marimuthu M HT Tamil
May 09, 2024 04:27 PM IST

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் (file)

ட்ரெண்டிங் செய்திகள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இருக்கும் கீழத் திருத்தங்கலில், இருந்த தனியார் பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெயிலின் தாக்கத்தால், ஆலையின் அறைகளில் வெப்பம் அதிகரித்து வந்ததாகத் தெரிகிறது. இதில் மதிய உணவு இடைவேளை சமயத்தில், வெப்ப அதிகரிப்பால் உண்டான பட்டாசு ஆலை விபத்தில், அந்த ஆலையில் இருந்த 4க்கும் மேற்பட்ட ஆலைகள் கடுமையாக வெடித்தன. இந்த விபத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 

மேலும் சிலர் மிகவும் அதிகமான தீக்காயங்களுடன், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்து வந்த தீயணைப்புத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். காவல் துறையினர் விபத்து தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பு:

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதலமைச்சர் கூறியதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான, அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார். 

விருதுநகரில் அடிக்கடி நடக்கும் பட்டாசு விபத்துக்கள்:

அதேபோல், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான வின்னர் பட்டாசு ஆலையில், இந்தாண்டு பிப்.17ல் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையின் 4 அறைகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அதேபோல், கடந்தாண்டு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்ற பட்டாசு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் அடிக்கடி நடப்பதால், அரசு இதைக் கவனமுடன் நோக்கி, தேவையான முன்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சுற்றுப்புற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்