தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Lenin: ரஷ்யப் புரட்சியின் பிதாமகன் விளாடிமிர் லெனினின் 153-வது பிறந்த தினம் இன்று!

HBD Lenin: ரஷ்யப் புரட்சியின் பிதாமகன் விளாடிமிர் லெனினின் 153-வது பிறந்த தினம் இன்று!

HT Tamil Desk HT Tamil
Apr 22, 2023 06:15 AM IST

Happy Birthday Lenin: மக்கள் புரட்சியால் வென்று காட்டிய விளாடிமிர் லெனினின்153-வது பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதோ..!

விளாடிமிர் லெனின்
விளாடிமிர் லெனின் (Getty)

ட்ரெண்டிங் செய்திகள்

அநீதிகள் வேறருக்கப்பட வேண்டும் என்பதும் சக மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதையும் தன் தந்தையிடம் கற்றுக்கொண்டார் லெனின். மார்க்சியத்தை தனது அண்ணன் அலெக்சாண்டரிடம் கேட்டு தெரிந்துகொண்டார். லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர் முற்போக்குக் கொள்கை உடையவராகவும், அப்போதைய ரஷ்ய ஆதிக்க அரசுக்கு எதிரான தீவிரவாத சிந்தனை கொண்டவராகவும் இருந்தார்.

அப்போது நாட்டின் வளங்களையெல்லாம் சுரண்டி தனிப்பட்ட முறையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தனர் ஜார் மன்னர்கள். மக்கள் மத்தியில் பசி, பஞ்சம், பட்டினி ஆகியவை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தன. ஜார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே ரகசிய போராட்டங்களை மக்கள் நடத்திகொண்டிருந்தனர். 

ஜார் மன்னரை அழித்தால் மட்டுமே நாட்டு மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பிய லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர் அவரை கொலை செய்ய முயற்சி செய்து பிடிபட்டார். அவருக்கு அரசாங்கத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் லெனின் குடும்பத்தில் இடியாக விழுந்தது. ஆனால், லெனின் இதனால் ஏற்பட்ட பாதிப்பை வெளிப்படுத்தவில்லை.

1887-ம் ஆண்டு கசான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார் லெனின். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே தனது சக மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டார். அதன் காரணமாக அவர் படித்துவந்த பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதையடுத்து, தானே சட்டப்படிப்பை ஒன்றரை வருடத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றார் லெனின்.

தொடர்ந்து ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் மக்களை அணி திரட்டும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கினார். அதற்காக, விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற அமைப்பையும் 1895-ம் ஆண்டு தொடங்கினார். லெனின் கைது செய்யப்பட்டு 14 மாதச் சிறைத் தண்டனை அனுபவித்தார். பிறகு, கிழக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு தன்னைப் போலவே ஒற்றைக் கருத்துடைய குரூப்ஸ்கயாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

அதன் பிறகு ரஷ்ய சமூக ஜனநாயத் தொழிலாளர் கட்சியை 1903-ல் லெனின் உருவாக்கினார். 1905-ல் ஜார் மன்னரை எதிர்த்துப் நடைபெற்ற புரட்சி 9 நாட்களில் முடிவுக்கு வந்து, தோல்வியுற்றது. இதையடுத்து பல நாடுகளில் லெனின் தலைமறைவாக வாழ்ந்தார். 1917-ல் தொழிலாளிகள், உழவர்களை ஒன்று திரட்டிப் புரட்சி நடத்தினார். ஆயுதப் போராட்டத்தையும் அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுவதையும் இறுதிக் கட்டத்தில் கையில் எடுத்தார் லெனின். 

1917 மார்ச்சில் ஜார் மன்னரையும், 1917 நவம்பரில் ரஷ்ய முதலாளிகள், நிலப்பிரபுக்களின் இடைக்கால அரசையும் மக்கள் புரட்சி வீழ்த்தியது. புரட்சி வென்ற பிறகு உலகின் முதல் சோஷலிச அரசின் தலைவரானார் லெனின். புரட்சி தந்த வெற்றிக்குப் பிறகு ரஷ்யாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு லெனின் கடுமையாக உழைத்தார். கல்வி, சுகாதாரம், அறிவியல், வேளாண்மை, தொழில் என அனைத்துத் துறைகளிலும் ரஷ்யா மேம்பட புதிய திட்டங்களை உருவாக்கினார்.

நாட்டில் நடக்கும் அநீதியை கடந்து போகும் மனிதர்களுக்கு மத்தியில் லெனின் என்ற சாதாரண மனிதன் மக்களை ஒன்றுதிரட்டி ஆதிக்கத்தை எதிர்த்து புரட்சியால் வென்றுகாட்டி இருக்கிறார். இன்றைய தினம் 153-வது பிறந்தநாள் காணும் லெனினை நினைவு கூறுவது நம் கடமை.

IPL_Entry_Point