தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Mukesh Ambani: ‘தந்தையை விஞ்சிய மகன்!’ முகேஷ் அம்பானி வளர்ந்தது எப்படி?

HBD Mukesh Ambani: ‘தந்தையை விஞ்சிய மகன்!’ முகேஷ் அம்பானி வளர்ந்தது எப்படி?

Kathiravan V HT Tamil
Apr 19, 2024 05:40 AM IST

“முகேஷ் அம்பானியின் வெற்றிக் கதை உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோருக்கு ஒரு உத்வேகம். அவரது தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம், சாமார்த்தியம், மற்றும் உறுதிப்பாடு அவரை உலகின் மிக வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவராக ஆக்கி உள்ளது”

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி

ட்ரெண்டிங் செய்திகள்

ஏப்ரல் 19, 1957ஆம் ஆண்டு ஏமன் தலைநகர் ஏடன் நகரில் பிறந்த முகேஷ் அம்பானியின் பள்ளி பருவம் மும்பையில் தொடங்கியது. 

மும்பை மாநகரில் 500 சதுரடி அடி அறையில் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொழிலை திருபாய் தொடங்கி இருந்தார். 

முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஹில் கிரேஞ்ச் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலை முடித்த அவர் முதுகலை வணிக மேலாண்மை (MBA) படிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

1980களின் தொடக்கத்தில் பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது. இதற்கான உரிமம் ரிலையன்ஸ் குழுமத்திற்கு உரிமம் வழங்கப்பட்டது.

ஓராண்டு எம்.பி.ஏ படிப்பை முடித்திருந்த முகேஷ், தந்தை அமைக்க உள்ள புதிய தொழிற்சாலைக்கு உதவியாக கல்லூரி படிப்பை விட்டு விலகி நேரடியாக தொழிலை கற்றுக்கொள்ள தொடங்கினார். 

தந்தை திருபாய் அம்பானி உடன் சேர்ந்து தொழில் நிர்வாகத்தை கற்றுக் கொள்ள தொடங்கிய முகேஷ் அம்பானி உடன் பின்னாட்களில் அவரின் இளைய சகோதரர் அனில் அம்பானியும் இணைந்து கொண்டார். 

2002ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு முகேஷ் மற்றும் அனில் ஆகியோர் சேர்ந்து குழும நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்கி இருந்தாலும் நாளாடைவில் ஏற்பட்ட பிரச்னை பாகப்பிரிவினைக்கு காரணம் ஆனது. 

பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு, டெக்ஸ்டைல் ஆகிய ரிலையன்ஸின் பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் முகேஷ் வசமும், அப்போதைய காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்களாக இருந்த நிதி சேவைகள், மின்சாரம், பொழுது போக்கு, டெலிகாம் உள்ளிட்டவை அனில் வசமும் சென்றது. 

மேலும் ஒருவரின் வியாபாரத்துக்குள் மற்றொருவர் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்த முதலீடும் செய்யக்கூடாது என்றும் இரு தரப்புக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தனிக்காட்டு ராஜாவாக களத்தில் குதித்த முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் செயல்பாடுகளை பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் சுத்திகரிப்புக்கு அப்பால் தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தி உள்ளது.

இன்று, இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமாகும். முகேஷ் அம்பானியின் வெற்றிக்கு அவரது தொலை நோக்குப் பார்வையும், துணிச்சலான ரிஸ்க் எடுக்கும் திறனும் காரணமாக உள்ளதாக தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை இந்தியாவில் டேட்டா புரட்சியை ஏற்படுத்தி தொலைத்தொடர்பு துறையில் திருப்புமுனையை உண்டாக்கியது. குறுகிய காலத்திற்குள், ஜியோ 425 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராக உருவெடுத்தது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் முகேஷ் அம்பானியின் சில்லறை விற்பனைத் துறையிலும் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகிறது, மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை ஃபேஷன் வரை அனைத்தையும் உள்ளடக்கியது.

அவரது வணிக வெற்றிகளுக்கு கூடுதலாக, முகேஷ் அம்பானி தனது சேவை பணிகளுக்காகவும் அறியப்படுகிறார். கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் பேரிடர் மீட்பு ஆகிய துறைகளில் பணிபுரியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையை அவர் நிறுவி உள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்