தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Former Haryana Minister Savitri Jindal Quits Congress

Savitri Jindal: ஹரியாணா முன்னாள் அமைச்சர் சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகல்..யார் இவர் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Mar 28, 2024 03:47 PM IST

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சாவித்ரி ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஹரியாணா முன்னாள் அமைச்சர் சாவித்ரி ஜிண்டால்.
ஹரியாணா முன்னாள் அமைச்சர் சாவித்ரி ஜிண்டால்.

ட்ரெண்டிங் செய்திகள்

84 வயதான சாவித்ரி ஜிண்டால் தனது சமூக ஊடக பதிவில் காங்கிரஸில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், "ஹிசார் தொகுதியின் எம்எல்ஏ-வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். நான் எம்எல்ஏவாக 10 ஆண்டுகளாக ஹிசார் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினேன். ஹரியாணா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டாலின் மகனும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 2014 வரை மக்களவையில் குருக்ஷேத்ரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். பாஜக இப்போது அவரை குருக்ஷேத்ரா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் விக்கித் பாரத் (வளர்ந்த இந்தியா) நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிக்க விரும்புவதாக நவீன் ஜிண்டால் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலின் விலகலை அடுத்து 84 வயதாகும் அவரது தாய் சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தில் சாவித்ரி ஜிண்டால் அமைச்சராக இருந்தார். 2014 ஆம் ஆண்டில் ஹிசார் தொகுதியில் பாஜகவின் டாக்டர் கமல் குப்தாவிடம் தோல்வியடைந்தார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ஆறாவது கட்டத்தில் ஹரியானாவில் மே 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

அஸ்ஸாமில் பிறந்தவரான சாவித்ரி, ஜிண்டால் நிறுவனத்தை நிறுவிய ஓம் பிரகாஷ் ஜிண்டாலை 1970-ல் திருமணம் செய்துகொண்டார். ஓம் பிரகாஷ் ஜிண்டால் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின்னர் அந்தக் குழுமத்தின் தலைவராக சாவித்ரி ஜிண்டால் தேர்வு செய்யப்பட்டார்.

சாவித்ரி ஜிண்டால் இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியாவால் நாட்டின் பணக்கார பெண்ணாக பட்டியலிடப்பட்டுள்ளார். அதோடு, உலகின் 50-வது மிகப் பெரிய பணக்காரராகவும் அவர் இருக்கிறார். இந்தியாவின் 10 பணக்கார பெண்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, மறைந்த தொழிலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஓ.பி.ஜிண்டாலின் மனைவியான சாவித்ரி ஜிண்டாலின் நிகர சொத்து மதிப்பு 29.1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ .2.42 லட்சம் கோடி) ஆகும்.

ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. அதோடு உள்கட்டமைப்பு, சிமென்ட் மற்றும் ஜவுளி போன்ற பல துறைகளிலும் தனது செயல்பாட்டை இந்தக் குழுமம் விரிவாக்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்