TN Wet Lands : அதிகரித்துவரும் வெப்பம்! குறைந்துவரும் ஈர நிலங்கள்! – என்ன செய்யவேண்டும்? – ஒரு வழிகாட்டி!
TN Wet Lands : ஈரநிலங்கள் பறவைகளின் வாழ்விடமாகவும், நீரை சேமிக்கும் இடங்களாகவும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகவும் இருப்பதால் அவற்றை காக்க வேண்டும்.
அரசின் Advanced Institite of Wildlife Conservation (AIWC) நிறுவனம், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இல்லாத 207 ஈரநிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை பறவைகள் சரணாலயமாக மாற்றி உத்தரவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஈரநிலங்கள், அங்கு வரும் பறவைகளின் அளவு, பரப்பு, அங்குள்ள அழியும் வாய்ப்பில் உள்ள உயிரினங்களை வைத்து தரம் பிரிக்கப்படுகிறது.
முக்கிய ஈரநிலங்கள் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளது.
"Assessment and Identification of potential wetlands as bird sanctuaries and conservation strategies for them in Tamilnadu" என்ற தலைப்பில் சமீபத்தில் AIWCஆல் விவாதிக்கப்பட்ட.து.
சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட Tamilnadu Wetland Mission வாயிலாகவும் எப்படி ஈரநிலங்களை காக்க வேண்டும் என்பதும் முன்னெடுக்கப்டுகிறது. அதன் மூலம் சமுதாயம் என்ன நலன்களைப் பெறும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Tamilnadu Bio-diversity conservation and greening project அறிக்கைப்படி, தமிழகத்தில் 4.63 லட்சம் எக்டேரில் (46,300 சதுர கி.மீ.), 8312 ஈரநிலங்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
AIWC தேர்ந்தெடுத்த 207 ஈரநிலங்களில் 10 ஈரநிலங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. சென்னையில் உள்ள அடையாறு கழிமுகம், செங்கல்பட்டில் உள்ள தையூர் ஏரி, கேளம்பாக்கத்தில் உள்ள காயல் (Backwaters) போன்றவை அந்த 10ல் அடங்கும்.
ஈரநிலங்களின் முக்கியத்துவம்
பறவைகளின் வாழ்விடமாகவும், அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் அவை துணைசெய்கின்றன.
வெள்ளத்தின்போது, நீரைத் தேக்கி வெள்ள பாதிப்பை குறைக்கவும், வறட்சியின்போது நீரைத் தேக்கி, நிலத்தடி நீரை உயர்த்தவும் அவை துணை செய்கின்றன.
நீரை வடிகட்டி தூய்மை செய்யவும் அவை உதவுகின்றன. (பரந்தூரிலுள்ள 2,605 ஏக்கர் ஈரநிலங்கள் காலியானால், கனமழையின்போது, நீரைத் தேக்க முடியாமல் சென்னைக்கு வெள்ள ஆபத்து அதிகமாகும்)
உணவு மறுசுழற்சிக்கும், கார்பன் சேமிப்பு கிடங்காகவும் அவை செயலாற்றும். (ஒரு ஏக்கர் ஈரநிலங்கள் 81-216 டன் கார்பனை சேமிக்கும் திறன்கொண்டது)
பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கும், வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்லும் இடமாகவும் ஈரநிலங்கள் உள்ளது.
கன்னியாகுமரி ஈரநில ஆய்வில் அங்கு 91 பறவைகள் இனம் இருப்பதாகவும், 31 வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.
வேலூர் ஈரநில ஆய்வில், அங்கு 127 வகை பறவைகள் இருப்பதாகவும், அழியும் வாய்ப்புள்ள நாரைகள் (Painted stork, Black-necked stork) அங்கு இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.
AIWCன் அறிக்கை அரசிற்கு வழிகாட்டியாக அமைந்து, ஈரநிலங்களை காக்கும் திட்டத்தில் தமிழக அரசு முனைப்பு காட்டினால், பறவைகள் வாழ்விடம், இயற்கை நீர்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், கார்பன் உள்வாங்கப்பட்டு, புவிவெப்பமடைதல் பிரச்னை குறைவதுடன், வெள்ள பாதிப்பும் குறையும். இயற்கை, மக்கள், உயிரினங்களுக்கிடையே சமச்சீர் உறவு ஏற்பட்டு, சூழல் பாதுகாக்கப்பட்டு அமைதி நிலவும்.
சென்னை அடையாறு கழிமுகத்தில் 201 வகை பறவைகள் இருப்பதுடன், பல மீன்கள், நண்டுகள், பிற நீர்வாழ் உயிரினங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன.
ஈரநிலங்களைக் காக்க உறுதிபூண்டுள்ள தமிழக அரசு பரந்தூர் விமானநிலையப் பகுதியில் 2,605 ஏக்கர் ஈரநிலங்கள் இருந்தும், அவை விமானநிலையம் அமைக்கப்பட்டால் பாதிப்படையும் எனத் தெரிந்தும் மாற்றுத் திட்டங்கள் குறித்து யோசிக்காமல் இருப்பது எப்படி சரியாகும்?
தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே மிக அதிகமாக ஈரநிலங்கள் உள்ளன.
சில புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் உள்ள மொத்த ஈரநிலங்கள் எளிதில் எண்ணிக்கையில் 30,000 தாண்டியுள்ளது.
எனவே 207 ஈரநிலங்கள் என வரையறுப்பது சரிதானா? என்ற கேள்வியும் எழுகிறது.
அரசு ஈரநிலங்களை "பறவைகள் சரணாலயமாக"மாற்ற முயற்சிகள் மேற்கொண்டாலும், துறைசார்ந்த நிபுணர்கள் ஈரநிலங்களை "சமூக காப்பு பகுதிகளாக - Community Reserves"ஆக, அறிவிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என ஆணித்தரமான வாதங்களை முன்வைக்கின்றனர்.
Community Reserve பகுதிகளாக இருந்தால் மட்டுமே ஈரநிலங்களால் பயனுறும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் ஈரநிலங்களை காக்க முடியும்.
பறவைகள் சரணாலயமாக மாறினால், உள்ளூர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, வனத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குக் கீழ் அவை சென்றுவிடும் அபாயம் உள்ளது.
ஆகாயத்தாமரை போன்ற ஊடுறுவும் தாவர வகைகளை கட்டுப்படுத்தாமல் போனால் அவை ஈரநிலங்களை வெகுவாக பாதிக்கக்கூடும்.
ஊடுறுவும் வகை மீனான ஜிலேபிக்கெண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபின், உள்ளூர் மீன்களின் வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டது என்பதால், அரசு ஈரநிலங்களை காக்கும் முயற்சியில், மேற்சொன்னவற்றையும் கருத்தில்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளூர் மக்களின் பங்களிப்பின்றி செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெருமளவு பலனைத் தராது என்பதால், அரசு "பறவைகள் சரணாலயம்"திட்டத்திற்கு பதில் ஈரநிலங்கள் உள்ள பகுதிகளை Community Reserve பகுதிகளாக மாற்றி பாதுகாப்பதே சிறந்த வழியாகும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்