Iruvar Ullam: நதி எங்கே போகிறது.. மனதில் பதிந்த கலைஞர் வசனங்கள்.. காவியமாக வாழும் இருவர் உள்ளம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 06:05 AM IST

Iruvar Ullam: கலைஞர் கருணாநிதியின் வசனத்தை உச்சரித்த சிறப்பு மிகுந்த ஒரு திரைப்படம் தான் இருவர் உள்ளம். எழுத்தாளர் லட்சுமியின் நாவலை கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

61 ஆண்டுகள் இருவர் உள்ளம்
61 ஆண்டுகள் இருவர் உள்ளம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனை புகுத்தியவர் கலைஞர் கருணாநிதி. இப்படிப்பட்ட ஆகச் சிறந்த கலைஞனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமை எப்போதுமே கலைஞர் கருணாநிதிக்கு உண்டு. எத்தனையோ வசனங்களை, கருணாநிதியின் எழுத்துக்களை சிவாஜி கணேசன் திரையில் உச்சரித்து இருக்கின்றார்.

அப்படி கலைஞர் கருணாநிதியின் வசனத்தை உச்சரித்த சிறப்பு மிகுந்த ஒரு திரைப்படம் தான் இருவர் உள்ளம். எழுத்தாளர் லட்சுமியின் நாவலை கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

கதை

 

மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த சிவாஜி கணேசன். எப்போதும் ஜாலியாக சுற்றும் இளைஞன். உல்லாசமாக பெண்களோடு பழகி ஊரை சுற்றும் ஒரு வாலிபன். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் சிவாஜி கணேசன் படித்து முடித்துவிட்டு சென்னையில் இருக்கக்கூடிய அவருடைய மாமாவின் நிறுவனம் ஒன்றை கவனித்துக் கொள்கிறார்.

இந்த சூழ்நிலையில் சரோஜாதேவியை காண்கின்றார். அவர் மீது சிவாஜி கணேசனுக்கு காதல் ஏற்படுகிறது. பெண்களோடு உல்லாசமாக சுற்றும் தனது வாழ்க்கையை தவிர்த்து விட்டு சரோஜா தேவியை மனம் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சிவாஜி கணேசன்.

ஆனால் அவர் பெண்களோடு சுற்றிய உல்லாச வாழ்க்கையை நினைத்து சரோஜாதேவி சிவாஜி கணேசனை திருமணம் செய்ய மறுக்கிறார். அந்த சமயம் சிவாஜி கணேசனின் தங்கைக்கு டியூஷன் ஆசிரியராக சரோஜாதேவி வருகிறார். சிவாஜி கணேசனின் பெற்றோர் சரோஜாதேவியை பார்த்துவிட்டு தனது மகனான சிவாஜி கணேசனுக்கு இந்த பெண் பொருத்தமாக இருப்பார். திருமணம் செய்து வைக்கலாம் என யோசிக்கின்றனர்.

அதன் பின்னர் பேசி முடித்து திருமணமும் செய்து வைக்கின்றனர். அதற்குப் பிறகும் சிவாஜிகணேசன் மீது சரோஜாதேவிக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையில் பல்வேறு விதமான திருப்பங்கள் சிவாஜி கணேசனின் வாழ்க்கையில் நடக்கின்றது. ஒரு கொலைப்பழி காரணமாக சிக்கிக் கொள்ளும் சிவாஜி கணேசனை மீட்டெடுக்கிறார் சரோஜாதேவி.

ஒரு அற்புதமான நாவல் அற்புதமான படைப்பாக வெளியே வரும்பொழுது மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய உதாரணமாகும். கருணாநிதியின் வசனங்கள் அனைத்தும் திரையரங்குகளில் கர ஒலிகளை எழுப்பினர்.

சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவி இருவரும் மாறி மாறி தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி இருப்பார்கள். நடிகை ஜெயலலிதாவின் தாயாரான சந்தியா. சிவாஜி கணேசனுக்கு தயாராக நடித்திருப்பார். மற்றவர்களின் நடிப்பை ஒப்பிடுகையில் சந்தியா அவர்களின் நடிப்பு அனைவரும் பேசும் படி இருந்ததாக கூறப்படுகிறது.

கே.வி.மகாதேவன் இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்று வரை தரம் குறையாத தங்கம் போல ஜொலித்து வருகிறது. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுத்துக்களால் பரிபூரணமடைந்தது. பறவைகள் பலவிதம், நதி எங்கே போகிறது, அழகு சிரிக்கின்றது, இதய வீணை தூங்கும் போது என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும்.

வாழ்க்கையில் மனிதர்கள் தவறு செய்வது சகஜம், திருந்து வாழ நினைப்பவர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த திரைப்படம். இன்றுடன் இருவர் உள்ளம் திரைப்படம் வெளியாகி 61 ஆண்டுகளாகின்றன. இருவர் உள்ளத்தால் பார்க்கும் அனைவருடைய உள்ளத்தையும் மாற்றிய இந்த திரைப்படம் காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்