தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Vishal Latest Speech Swami Vivekananda Blood Centre At Lions Club Chennai

Actor Vishal: ‘10 ரூபாய்க்கு இரத்த பரிசோதனை… ஒருத்தருக்கு உதவி பண்ணலாம் ஆனா..’ - விஷால் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 05, 2024 03:53 PM IST

பத்து ரூபாய்க்கு ரத்த பரிசோதனை!? இதை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்..அதற்கு என் முகம் பயன்பட வேண்டும்.. இவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது! மக்களுக்காக பணியாற்றி வரும் இவர்கள் தான் சிறப்பானவர்கள்!! - நடிகர் விஷால் பேச்சு

விஷால் பேச்சு!
விஷால் பேச்சு!

ட்ரெண்டிங் செய்திகள்

அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளிய மக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் அரும்பாக்கத்தில் (DG வைஷ்ணவ் கல்லூரி வளாகம்) செயல்படுத்தி வருகிறது.

இதன் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி பேசி, நினைவு பரிசை வழங்கினார் நடிகர் விஷால்.

இந்த நிகழ்வில் விஷால் பேசும்போது, “லயன்ஸ் கிளப் சார்பில் வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் விஷயம் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களுடைய அறக்கட்டளைக்கும் அவர்கள் நிறைய உதவி செய்திருக்கிறார்கள் என உதவியாளர் ஹரி மூலமாக தெரிய வந்து, அவர்களை சந்திக்கும் எண்ணத்தில் இருந்தேன். 

அதற்காகவே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். மற்றபடி இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர் நான் அல்ல. இதோ இங்கே அமர்ந்திருக்கிறார்களே SVDC-ஐ சேர்ந்த மருத்துவர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் இவர்கள்தான்..

பத்து ரூபாய்க்கு ரத்த பரிசோதனை என்பது சாதாரண விஷயம் அல்ல.. இதை நான் வெளியே சென்று சொன்னால் கூட பைத்தியக்காரத்தனமாக பேசாதே, எங்கே நடக்குது இது என்று கேட்பார்கள். இதை வெளி உலகத்தில் உள்ள எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு என் முகம் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்விற்கு வந்துள்ளேன்.

ஒரே நாளில் ஒன்றரை லட்சம் நிதி திரட்ட முடிகிறது என்றால் இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.. மேடையில் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டு பேசுவதற்காக நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். 

தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இன்னும் யாரிடம் சென்று இதுபோன்ற மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவி ஆகியவற்றுக்காக காசு கேட்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார்கள்.

சம்பாதிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மனிதர்கள் கூட பத்து ரூபாயில் ரத்த பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்கிற சூழலை உருவாக்கினீர்களே.. அதை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது.. மருத்துவமனை செல்லும்போது அங்குள்ள டாக்டர்கள், ஊழியர்கள் செவிலியர்களைத்தான் நிச்சயம் காப்பாற்றி விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் நாங்கள் தெய்வங்களாக பார்க்கிறோம்.

டாக்டர் பட்டம் பெற்று வெளிநாட்டிற்கு சென்று கூட வேலை பார்க்கலாம்.. ஆனால் நாம் என்ன புண்ணியம் பண்ணியிருக்கிறோம், கெடுதல் பண்ணி இருக்கிறோம் என்று பார்க்கும்போது புண்ணியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது..

சன் டிவியில் 13 வாரங்கள் ‘நாம் ஒருவர்’ என்கிற நிகழ்ச்சியை நான் நடத்தியபோது கூட ஒவ்வொரு வாரமும் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் தேர்ந்தெடுத்தேன். ஒரே நாளில் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்ற முடியும் என்கிற விஷயம் அதில் இருந்தது. அந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடந்த சம்பவங்கள் என்னை பாதித்தது.

சிறந்ததிலேயே சிறந்ததை தேர்வு செய்வது என்பது எளிது. ஆனால் மோசமானதில் சிறந்ததை தேர்வு செய்வது என்பது மிக கடினம். ஏனென்றால் ஒருவரின் வாழ்க்கையை மட்டும் தான் என்னால் மாற்ற முடியும். ஆனால் வெளியே நிற்கும் 9 பேர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது ? அதனால் தான் என் அம்மாவின் பெயரில் தேவி அறக்கட்டளை துவங்கி ஏழை குழந்தைகளுக்கு எப்படியாவது படிப்பை கொடுத்து விட வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்