Aadujeevitham Review: மாடாய் உழைத்த உழைப்பு.. கரை சேர்ந்ததா ‘ஆடு ஜீவிதம்’.. பாலைவன வாழ்க்கையை கூலாக விளக்கும் விமர்சனம்!
Aadujeevitham The Goat Life Movie Review: ‘ஒவ்வொரு காட்சியுமே ரண வேதனையை கொண்டே நகர்கிறது. குறிப்பாக பாலைவனத்தையும், பசுமை நிறைந்த கேரளத்தையும் தன்னுடைய திரைக்கதையால் பொருத்தி காட்சிகளை நகர்த்தி இருந்தது மிகச்சிறப்பு’
இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம் (த கோட் லைஃப்). உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 14 வருட உழைப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
கதையின் கரு:
வறுமை காரணமாக, தன்னை நம்பி வந்தவளை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவள் வயிற்றில் இருக்கும் அவரின் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நண்பர் ஒருவரின் உதவியை பெற்று, அரபு நாட்டுக்கு உதவியாளர் பணிக்கு பயணப்படுகிறார் நஜீப் முகமது (பிரித்விராஜ்). ஆனால் எதிர்பாராத விதமாக அவர் வாழ்க்கை முழுவதும் அடிமைப்படுத்தி வாழ வைக்கும், ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
பசுமையை மட்டுமே பார்த்து, முகர்ந்து உணர்ந்து வாழ்ந்த அவரின் தேகம், அந்த இரக்கமே இல்லாத பாலைவனத்தில் அணு, அணுவாய் அனுபவிக்கும் சித்திரவதைகளும் அதில் இருந்து அவன் எப்படி மீண்டான் என்பதுமே, ஆடு ஜீவிதம் படத்தின் கதை!
அரபு நாட்டில் அப்பாவியாக இறங்கி, ஆடு மேய்க்கும் அரபு கும்பலிடம் அடி வாங்கி, அடிமைப்பட்டு, அவஸ்தைக்கு உள்ளாகி, போரிட்டு, அதில் தோற்று, இனி வாழ்க்கை முழுவதும் பாலை வனமே என மனம் நொந்து, ஒரு கட்டத்தில் அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இறங்கி, தனிமை, பசி, வெயில், விடாமுயற்சி, நட்பு, தாகம், காதல் என அனைத்திலும் ரணவேதனை அடைந்து.… என பிரித்விக்கு படத்தில் எக்கச்சக்க முகங்கள்.. அனைத்தையும் பெரும் முயற்சி எடுத்து, கன கச்சிதமாக கடத்தி இருக்கிறார்.
சிறிது நேரம் வந்தாலும் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் நம்மை கவர்ந்து விடுகிறார் சைனு ( அமலா பால்). துணை கதாபாத்திரங்களாக வரும் இப்ராஹிம் ஜிம்மி ) மற்றும் இன்னொரு கதாபாத்திரம் அவர்கள் எதிர்கொண்ட வலியை உண்மைக்கு நெருக்கமாக கடத்தி இருக்கிறது.
படத்தில் பிரித்வியின் நடிப்பு ஒரு தூண் என்றால், இன்னொரு தூணாக நிற்பது ஏ ஆர் ரஹ்மானின் இசை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, தன்னுடைய பின்னணி இசையில் தான் ஒரு ஆஸ்கர் நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ரஹ்மான்.
முகமதுவின் காதலை,அன்பை, காமத்தை, தனிமையை, ஏக்கத்தை, பரிவை என அனைத்து உணர்ச்சிகளையும், தன்னுடைய இசையால் பார்வையாளர்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்து இருக்கிறது அவரின் இசை.
பெரியோனே பாடல் முழுவதுமாக படத்திற்குள் இடம் பெறாதது சிறிய ஏமாற்றம். படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி குடும்பத்திற்காக பெரும் வலியை சும ந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சாமானியனின் வலியை மிக உண்மையாக எந்தவித இறக்கமும் காட்டாமல் காட்சி படுத்தி இருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியுமே ரண வேதனையை கொண்டே நகர்கிறது. குறிப்பாக பாலைவனத்தையும், பசுமை நிறைந்த கேரளத்தையும் தன்னுடைய திரைக்கதையால் பொருத்தி காட்சிகளை நகர்த்தி இருந்தது மிகச்சிறப்பு.
படத்தின் ஆணி வேராய் சுனிலின் ஒளிப்பதிவு அமைந்து இருந்தது. கேரளத்தையும் அதில் வாழும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தையும் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்திய அவரது கேமரா, பாலைவனத்தையும், அங்கு கத்தி போல் கிழிக்கும் வெயிலையும், நேர்த்தியாக கடத்தி இருக்கிறது. அவ்வளவு ரண வேதனைக்குள் இதம் தருவதாய் காதல் சிறிது இடம் பெற்றாலும், பெரும்பான்மையான காட்சிகள் வலியை சுமந்து கொண்டே நகர்வதால், ஒவ்வொரு காட்சியையும் நாம் பெரும் பாரத்துடனே கடந்து வர வேண்டி இருக்கிறது. இருப்பினும் பிருத்திவியின் உழைப்பிற்காகவும், ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசைக்கவும் ஆடு ஜீவிதத்தை திடம் கொண்ட நெஞ்சை கொண்டு பார்க்கலாம்.
டாபிக்ஸ்