தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  ’ஆட்டம் ஆரம்பம்!நயினாருக்கு தொடர்பு உடையவர்களிடம் சிக்கிய 4 கோடி?’ வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி!

’ஆட்டம் ஆரம்பம்!நயினாருக்கு தொடர்பு உடையவர்களிடம் சிக்கிய 4 கோடி?’ வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி!

Kathiravan V HT Tamil
Apr 26, 2024 05:59 PM IST

”இந்த பணம் யாருக்கு சொந்தமானது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள விரைவில் ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது”

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

ட்ரெண்டிங் செய்திகள்

பணம் பிடிபட்டது எப்படி?

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை உச்சத்தில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அன்று சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையரக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் எழும்பூரில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் ஏசி கோச்சில் போலீசார் நடத்திய சோதனையில் மூன்று பேரிடம் இருந்து 3.90 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பணத்தை கொண்டு சென்ற சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் மேலாளர் சதீஷ், அவரது தம்பி நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகியோரை விசாரித்ததில், சதீஷ் பாஜகவில் உறுப்பினர் ஆக உள்ளது தெரிய வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மூலம் கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், பின்னர் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய ப்ளூ டைமண்ட் ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் செய்தியார்களிடம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை விசாரிக்க மறுப்பு

 

இந்த நிலையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கோரிய நிலையில் நீதிமன்றத்தில் அதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்து இருந்தது. 

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதே போல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக திருநெல்வேலி திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனு அளித்ததாக கூறி உள்ளார்.

மேலும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க அமலக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஸ் மற்றும் சுந்தரமோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினர்.

இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘இந்த வழக்கு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வராது’ என கூறினார். மேலும் இந்த மனு தொடர்பாக விரிவாக பதில் தர அவகாசம் கேட்ட நிலையில் வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் 

நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு விசாராணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்த பணம் யாருக்கு சொந்தமானது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள விரைவில் ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

WhatsApp channel