ARR Concert: இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா? தாம்பரம் காவல் ஆணையர் பேட்டி!
”25 ஆயிரம் பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில் கூட்டம் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வந்துள்ளனர்”
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடி தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு பணிகளை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்கொண்டுள்ளர்
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் பெய்த தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒத்திவைப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நெரிசலை தவிர்க்க ஓஎன்ஆர் சாலையை பயன்படுத்தலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று நிகழ்ச்சி நடை பெற்ற போது உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கூட்டம் நிரம்பி வழிந்தது என ரசிகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் நிகழ்ச்சியின் போது ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் இரண்டு ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று நிகழ்ச்சியை பார்க்கும் நிலை ஏற்பட்டதாக கூறி ரசிகர்கள் புகார்களை தெரிவித்து சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஏ.ஆர்.ரகுமான், இசைக்கச்சேரிக்கு சுனாமி போல மக்கள் குவிந்து விட்டார்கள். அவர்களின் அன்பை எங்களால் கையாள முடியவில்லை. ஒரு இசையமைப்பாளராக என்னுடைய வேலை நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கச்சேரி செல்வதை உறுதிப்படுத்துவது. ஆனால் இப்போது நான் உச்சக்கட்ட வேதனையில் இருக்கிறேன்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததால் பாதுகாப்பு முதன்மையான பிரச்சினையாக இருந்தது. நான் இந்த சம்பவத்திற்கு யாரையும் விரலைக்காட்ட விரும்ப வில்லை. நகரம் விரிவடைகிறது என்பதை நாம் உணரவேண்டும். அத்துடன் இசையை நுகரும் ஆர்வமும், கலையும் விரிவடைகிறது” என கூறி இருந்தார். மேலும் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த ’ACTC Events’ நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டது.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற பனையூரில் தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி உடன் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்றைக்கு மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததே பிரச்னைக்கு காரணம் என தெரிகிறது. 25 ஆயிரம் பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில் கூட்டம் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வந்துள்ளனர். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணை செய்து வருகிறோம். அமைப்பாளர்களிடம் ஆலோசனை செய்து இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்க்காலத்தில் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்போம்.
வாகனங்களை சரியாக நிறுத்த முடியாத நிலை இருந்ததால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இனிமேல் இப்பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கலாமா அல்லது கூடாது என்பதை தீர்மானிக்கவே ஆய்வு செய்தோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரிப்போம். நிகழ்ச்சிகள் மக்களுக்கு தேவை அது பிரச்னை இல்லாமல் நடத்துவதற்கான நடவடிக்கை தேவை. போதுமான போலீஸ் போடப்பட்டதால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத நிலை உள்ளது.”