தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tanjore Big Temple Chithirai Festival : தஞ்சையில் குவிந்த பக்தர்கள் - பெரியகோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கோலாகலம்

Tanjore Big Temple Chithirai Festival : தஞ்சையில் குவிந்த பக்தர்கள் - பெரியகோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கோலாகலம்

Priyadarshini R HT Tamil
May 01, 2023 11:15 AM IST

Tanjore Big Temple Ther : தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆரூரா.. தியாகேசா.. என்ற முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கோலாகலம்
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கோலாகலம்

காலப்போக்கில் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராட்டியர்களுக்கு பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்றுபோனது. இதனால் இடைப்பட்ட காலத்தில் சித்திரை திருவிழா களையிழந்து காணப்பட்டது. பெரியகோயிலில் தேர் இல்லாத குறையை போக்குவதற்காக தமிழக அரசு புதிய தேரை உருவாக்க 2013ம் ஆண்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தேரை உருவாக்குவதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் தேர் திருப்பணி நிதியில் இருந்து ரூ.17 லட்சமும், தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிதியில் இருந்து ரூ.20 லட்சமும் செலவிடப்பட்டது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பின்னர் 2015ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதன்மூலம் சித்திரை திருவிழாவும் புத்துயிர் பெற்றது. தொடர்ந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் 15ம் நாளன்று தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் தேருக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, மேல வீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்திற்கு வந்தடைந்தது.

பின்னர் 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருள, தேரோட்டத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகாட்சி மேயர் ராமநாதன், அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி கமிஷனர் கவிதா, சதய குழுவினர் உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

பின்னர், தேருக்கு முன் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் தொடர்ந்து செல்ல தியாகராஜர் – கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

தேருக்கு முன் ஓதுவார்கள் திருமுறைகளை இசைத்தபடியும், பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடிச் சென்றனர். சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன. நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து இருந்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனால் ஊரே விழா கோலம் பூண்டிருந்தது.

தேரின் சாதாரண உயரம் 19 அடி, தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாகும். தேரின் அகலம் 18 அடியாகும். சக்கரத்தின் உயரம் 6 அடி, தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரத்திற்கு பிறகு 43 டன் எடையாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்