தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மகாராஷ்ட்ராவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 53 பேர் காயம்

மகாராஷ்ட்ராவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 53 பேர் காயம்

Aug 17, 2022, 03:30 PM IST

மகாராஷ்ட்ரா மாநிலம் கோன்டியா அருகே சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிகாலை 2 மணி அளவில் குத்மா - கோன்டியா ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. பகத் கி கோத்தி சூப்பர் பாஸ்ட் எக்பிரஸ் ரயில், முன்னே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் எக்பிரஸ் ரயிலின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு வெளியேறின. சிக்னல் கிடைக்காமல் இருந்ததே இந்த விபத்துக்கான காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பயணிகளோடு சென்ற அந்த எக்பிரஸ் ரயிலானது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. தானியங்கி சிக்னல் தடுப்பு அமைப்பு உதவியுடன் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும். இரவு நேரத்தின் நெறிமுறைப்படி ரயிலின் லோகோ பைலட், சிவப்பு விளக்கு எரிவதை 2 நிமிடம் வரை காத்திருந்து பார்த்த பின்னர் மெதுவாக ரயிலை இயக்கத்தொடங்கினார். ஆனால் முன்னால் சென்ற சரக்கு ரயில் அங்கேயே நின்றுள்ளது. பின் உடனடியாக அவசர பிரேக் செலுத்தி ரயிலை நிறுத்த முயற்சித்தார். இருப்பினும் முன்னே நின்ற சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை. விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு அதே ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே சீரமைப்பு பணிகளும் நடைபெற்று ரயில் தனது பயணத்தை தொடர்ந்தது.