தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Rr Result: ஒற்றை ஆளாக போராடிய சஞ்சு சாம்சன்! இரண்டாவது தொடர் தோல்வியில் ராஜஸ்தான் ராயல்ஸ்

DC vs RR Result: ஒற்றை ஆளாக போராடிய சஞ்சு சாம்சன்! இரண்டாவது தொடர் தோல்வியில் ராஜஸ்தான் ராயல்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 07, 2024 11:40 PM IST

சஞ்சு சாம்சன் மட்டும் ஒற்றை ஆளாக போராட, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக பங்களிப்பு அளிக்கவில்லை. இந்த சீசனில் தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி அணியும் புள்ளிப்பட்டியலில் ஒரு இடத்தில் முன்னேறியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டோனோவன் ஃபெரேரா, ஷுபம் டூபே ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இஷாந்த் ஷர்மா, குலாப்தீன் நயிப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

டெல்லி கேபிடல்ஸ் அதிரடி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் அடித்தது.

அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65, ஜேக் பிராசர் மெக்குர்க் 50, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ட்ரெண்ட் போல்ட், யஸ்வேந்திரா சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

222 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் உள்ளது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86, ரியான் பிராக் 27, ஷுபம் துபே 25 ரன்கள் எடுத்தனர். டெல்லி கேபிடல்ஸ் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராஷிக் சலாம், அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஒற்றை ஆளாக போராடிய சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓபனர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் எதிர்பார்த்த தொடக்கத்தை தரவில்லை. ஜெய்ஸ்வால் 4, பட்லர் 19 ரன்கள் அடித்து வெளியேறினர்.

மூன்றாவது விக்கெட்டுக்கு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ரியான் பிராக் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. 27 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மிடில் ஆர்டரில் பேட் செய்த ஷுபம் துபே அதிரடியாக பேட் செய்தபோதிலும் 12 பந்துகளில் 25 ரன்கள் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இதற்கிடையே நிதானமும், அதிரடியும் கலந்து விளையாடி வந்த சாம்சன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

சர்ச்சை அவுட்

சிறப்பாக சேஸ் செய்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து வந்தார் சஞ்சு சாம்சன். 46 பந்துகளில் 86 ரன்கள் அடித்த அவர் சிக்ஸர் முயற்சியில் பவுண்டரி அருகே ஷாய் ஹோப்பிடம் பிடிபட்டார்.

அந்த கேட்சை பிடிக்கும்போது, ஹோப் கால்கள் பவுண்டரியை லேசாக உரசியது போல தெரிந்தும், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால் சதத்தை மிஸ் செய்ததுடன், நன்றாக பேட் செய்து வந்த சாம்சன் முக்கியமான கட்டத்தில் வெளியேறினார். அவர் களத்தில் இருந்தவரை ராஜஸ்தான் அணிக்கான வெற்றி வாய்ப்புகள் இருந்தது. இதையடுத்து டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு நெருக்கடி தந்ததுடன் வெற்றியையும் தன் வசமாக்கியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point