Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்
May 21, 2024, 05:31 PM IST
Velumani admk: “இது திமுக மற்றும் இன்ன பிற கட்சிகளின் தூண்டுதல்களில் நடக்கிறது. ஆகையால் 2026 மட்டுமல்ல.. இன்னும் வரும் காலங்களிலும் எடப்பாடி பழனிசாமி தலையிலான கூட்டணி தொடர்ந்து வெற்றி பெறும்” - வேலுமணி விளக்கம்
Velumani Admk: அதிமுகவில் உள்கட்சி விவகாரங்கள் பூதாகரமாக வெடித்திருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
வேலுமணி விளக்கம்:
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது, “இந்த பிரச்சினையை யார் கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி அற்புதமாக கூட்டணி வைத்தார். அவரை போல, எந்த தலைவரும் பிரச்சாரம் செய்யவில்லை. அங்கு அவ்வளவு கூட்டம் கூடுகிறது.
மக்கள் அப்படி எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றிபெற போகிறது. நாங்கள் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு சூழ்நிலை நிலவும் பட்சத்தில், இங்கு பிற கேள்விகளுகு இடமே கிடையாது. இந்தக்கேள்வியை கேட்பது யார்? இந்தப்பிரச்சினையை எழுப்பது யார்?
முடிவு தேர்தல் வெற்றிதான்:
இதற்கெல்லாம் முடிவு தேர்தல் வெற்றிதான். நாங்கள் அமோகமாக வெற்றி பெறுவோம். இந்த பிரச்சினையை நீங்கள் பத்திரிகையில்தான் எழுதுகிறீர்கள். எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. தேர்தல் வேலைகள் முடிந்து விட்டதால், எங்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கிறது. குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறோம்.
கட்சி சார்ந்த வேலைகளை கவனித்துக்கொண்டிருக்கிறோம். கோயில்களுக்கு செல்கிறோம். உலகத்தில் 7 ஆவது கட்சியாகவும், இந்தியாவில் பெரிய கட்சியாகவும் இருக்கிறோம். 2 கோடி தொண்டர்களை வைத்திருக்கிறோம். எங்களுக்குள் எந்த குழப்பமும் கிடையாது. குழப்பம் செய்தவர்கள் எல்லாரும் வெளியே போய் விட்டார்கள். ஆனால் சில ஊடகங்கள் எங்களுக்குள் பிளவு என்றெல்லாம் எழுதி, இதனை பெரிய பிரச்சினை போன்ற பிம்பத்தை உருவாக்குகிறீர்கள்.
2026 மட்டுமல்ல:
இது திமுக மற்றும் இன்ன பிற கட்சிகளின் தூண்டுதல்களில் நடக்கிறது. ஆகையால் 2026 மட்டுமல்ல.. இன்னும் வரும் காலங்களிலும் எடப்பாடி பழனிசாமி தலையிலான கூட்டணி தொடர்ந்து வெற்றி பெறும்” என்று பேசினார்.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே காங்கிரஸில் இருந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, திடீரென்று அந்த கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை, இன்னும் சில முக்கிய புள்ளிகள் பாஜகவில் வந்து இணைவார்கள் என்றார்.
ஆனால் அதிமுகவில் இருந்து யாரும் பாஜவிற்கு செல்லவில்லை. இதற்கிடையே அதிமுக தலைவர் செங்கோட்டையன், பாஜகவில் இணைவதாக செய்திகள் பரவியது. அதனை செங்கோட்டையன் மறுத்தார். இந்த நிலையில், திமுக அமைச்சர் ரகுபதி, தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக, செங்கோட்டையன் தலைமையில் செயல்பட போகிறதா? இல்லை வேலுமணி தலைமையில் செயல்பட போகிறதா? என்பது தெரியும். அதிமுகவில் பாஜக பிளவை ஏற்படுத்தும் என்றார். இப்படி தொடர்ந்து புகைச்சல் நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த விவகாரத்திற்கு வேலுமணி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்