TOP 10 NEWS: ’வேலுமணி மீது பாய்ந்த வழக்கு முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
Sep 18, 2024, 07:38 PM IST
TOP 10 NEWS: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு, செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆக உத்தரவு, தேவநாதன் யாதவ் காவல் நீட்டிப்பு, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம், போதை பழக்கம் குறித்து மருத்துவர் ராமதாஸ் கவலை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.வேலுமணி மீது வழக்குப்பதிவு
சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. மழைநீர் வடிகால் பணிகள், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் 26.61 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார்.
2.தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும். வரும் 25ஆம் தேதிக்கு பிறகே மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்.
3.நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருணகிரி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
4.திருவள்ளுவர் தினத்தை மாற்ற முடியாது
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்பதால் அந்த நாளை திருவள்ளுவர் தினமாக அறிவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
5.மத மாற்ற முயற்சி நடக்கவில்லை என சிபிஐ தகவல்
மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலை8யில் மாணவி லாவண்யா மரணத்திற்கு மத மாற்ற முயற்சி காரணம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்.
6.தேவநாதன் யாதவுக்கு காவல் நீட்டிப்பு
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 27ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
7.ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம்
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்த போவது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
8.செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆக உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 1ஆம் தேதி அன்று ஆஜர் ஆக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
9.ராகுல் காந்திக்கு மிரட்டல் - முதலமைச்சர் கண்டனம்
ராகுல் காந்திக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். பா.ஜ.க. தலைவர் ஒருவர் "ராகுல் காந்தி அவர்களின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்" எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் "ராகுல் காந்தி அவர்களின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு" எனவும், இன்ன பிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என முதலமைச்சர் கருத்து.
10.கஞ்சா பரவல் குறித்து ராமதாஸ் வேதனை
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடமிருந்த கஞ்சா போதைப் பழக்கம் இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்ட நிலையில் அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும், போதைப் பொருட்களின் விற்பனைக்கு மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்